11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் மீண்டும் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக 300க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
144 தடை உத்தரவை கண்டித்தும், 11 அம்ச கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும், கூட்பப்புளி, கூத்தங்குளி, உவரி ஆகிய இடங்களில் அப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள தேவலாயங்கள் முன்பு நேற்று காலை முதல் மாலை வரை அறப்போராட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு ஊரிலுமிருந்து பெரும் திரளானோர் இதில் கலநது கொண்டனர். அந்தந்த ஊர் எல்லை பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கலெக்டர் செல்வராஜ் ராதாபுரம் பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்தார்.
நேற்று மாலை இடிந்தகரையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் உதயகுமார் பேசுகையில், நமது போராட்டத்தை எப்படியாவது வலுவிலக்க செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. இதனால் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களை யாரும் கவனிக்க கூட வரவில்லை.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். எப்போது வேண்டுமானாலும், யாருடனும், எங்கும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம். சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதிக்க கூடாது. இன்று 11ம் தேதி மாலைக்குள் பேச்சுவார்த்தை குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.