Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் போராட்டம் தொடரும்

கூடங்குள‌ம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளத்தைச் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வந்தது. 63 பெண்கள் பங்கேற்ற இந்த உண்ணாவிரதம் நேற்று 14வது நாளாக நீடித்தது.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் உடல் நிலையை கருத்தில் கொண்டு பெண்களின் உண்ணாவிரதத்தை மேலும் நீட்டிக்காமல் முடிவுக்கு கொண்டுவர போராட்டக்குழுவினர் முடிவு செய்தனர். நேற்று மாலையில் 63 பெண்களும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

இது கு‌றி‌த்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகை‌யி‌ல், பெண்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் இங்கு போராட்டம் வழக்கம்போல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்.

வரு‌ம் 17ஆ‌ம் தேதி தமிழர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் இடிந்தகரை உண்ணாவிரத பந்தலில் மாநாடு நடக்கிறது. இலங்கையில் இறுதிகட்ட போரில் சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் பலியான ஈழத் தமிழர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று மாலை 5 மணி அளவில், தீபம் ஏந்தி பேரணியும் நடக்கிறது. மீனவ கிராமங்களில் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். தற்போது மீனவர்களை மீன்பிடிக்கச் செல்லக் கேட்டுக்கொண்டு உள்ளோம் எ‌ன்று உதயகுமார் கூ‌றினா‌ர்.

Exit mobile version