நேற்று இடிந்தகரை சர்ச் வளாகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அங்கிருந்து மக்களுடன் ஊர்வலமாக கடற்கரை சென்று உடலை மண்ணில் புதைத்து போராட்டம் நடத்தினார். அவருடன், உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரும் மண்ணில் புதைந்து கொண்டனர். அவர்கள், பின்னர் கடலில் குளித்து போராட்டத்தை முடித்தனர்.
ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்களும், பெண்களும் மணலில் புதைந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் பேசிய வைகோ, கூடங்குளம் அணுமின் நிலையம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இடிந்தகரையில், ஓராண்டுக்கும் மேலாக அமைதி வழியில், அறவழியில், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர். இம்மாதிரி ஒரு போராட்டம், ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில் நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
சாதி, மதம், கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடினர். அவர்கள் மீது காவல்துறையினர் வன்முறையை கையாண்டு தடியடி நடத்தியுள்ளது. இந்த போராட்டம் அணுஉலையை மூடும் வரை தொடரும் என்றார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் இனவாதப் போராட்டமல்ல. மனிதகுலத்தின் இருப்பிற்கான போராடமுமே. அணு மின் நிலையம் இலங்கையின் சிங்களப் பகுதியில் அமைந்தாலும் வைகோ போராடத் தயார் என்றால் கூடங்குளத்தில் வைகோவின் தலையீடு சமூகப்பற்றுள்ளதே.