
கூடங்குளம் அணுமின் நிலையம் எங்கள் பகுதி மக்களின் கருத்தை கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், ஜனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்டத் திட்டமாகும். எங்களுடைய போராட்டத்துக்கு எந்த வெளிமாநிலத்திலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களில் இருந்தோ, தனியார் நிறுவனங்களில் இருந்தோ, கட்சிகளிடமிருந்தோ பணமோ, வேறு உதவிகளோ வரவில்லை.
எங்கள் மீனவ மக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பீடி சுற்றும் பெண்கள் தரும் சிறிய நன்கொடைகளை வைத்து, எளிமையாக போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இப்பிரச்சினையில் தலையிட்டு, டாக்டர் இனியன் தலைமையில் மாநில குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால், அணுசக்தி துறையின் முக்கிய தலைவர்களில், ஒருவரான டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் இந்தக் குழுவில் இடம் பெற்றது எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதையும் ஏற்றுக் கொண்டோம்.
பிப்ரவரி 18-ந்தேதி மாலை மாநில குழு அணு உலைகளை பார்வையிட்டது. பிப்ரவரி 19-ந்தேதி மதியம் எங்கள் போராட்டக் குழுவை சேர்ந்த 9 பேரை கலெக்டர் அலுவலகத்தில் குழு சந்தித்தது. எங்கள் பகுதி கிராமங்களுக்கு வந்து மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்க அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
தாங்கள் நியமித்த குழு, எங்கள் மக்களை, புறந்தள்ளியது வேதனையளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதே என நற்சான்றிதழ் வழங்கி தனது நம்பகத்தன்மையை அக்குழு இழந்துவிட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான மாற்றங்களை செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களை கேட்டுக் கொள்கிறோம்.