போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் போது நெல்லை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். தற்போது இந்த போராட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
நெல்லை மாவட்டத்தில் கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, பெரியதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்கள், கடல் வழியாக சென்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கன்னியாகுமரி மீனவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், ஆயுதப்படையினர், காவல்துறையினர் என 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, அணுமின் நிலையத்தை சுற்றி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கூடங்குளத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் அதேநேரத்தில், அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவான அரசியல் கட்சிகள் சார்பில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.