Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இரண்டு மாதத்தில் உற்பத்தி ஆரம்பிக்கிறார்கள்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தாலும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக, அணுமின் நிலையத்தில் மீண்டும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அணுமின் நிலையத்தில் எத்தனை நாட்களில் மின்சார உற்பத்தியை தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், விஞ்ஞானிகளுடன் அதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்கும் நேற்று முன்தினம் இந்திய அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயின் கூடங்குளம் வந்தார். அவருடன் ரஷிய நாட்டைச் சேர்ந்த அணு உலை கட்டுமானம், கட்டமைப்பு நிறுவன தலைவர் லிமரன்கோ வலேரி மற்றும் ரஷிய உயர் விஞ்ஞானிகள் சிலரும் வந்து இருந்தனர்.நேற்று முன்தினம் அவர்கள் ஆய்வு செய்து முதல் அணு உலையில், மின் உற்பத்தி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ராதாபுரம் தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அணு மின்சார கழக தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் அளித்தார்கள். அதில் உள்ள கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னதாக ரஷ்ய விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்திய விஞ்ஞானிகள் ஊடகவியலாளர் சந்த்திப்பை ஏற்பாடு செய்தனர். அதில் வெளியான அறிக்கை:

“ஜப்பான் நாட்டில் புகுசிமா அணுஉலை விபத்து காரணமாக கூடங்குளம் பகுதி மக்கள் அச்சமடைந்து திடீர் போராட்டத்தை தொடங்கினர். அந்த போராட்டத்துக்கு முன்பே மாதிரி எரிபொருளை நிரப்பி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெப்பநீர் பரிசோதனை ஓட்டம் நடத்தி இருந்தோம்.

இந்த நிலையில், கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் காரணமாக 6 மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் அணு உலை முடங்கிக் கிடந்தது. அரசு எடுத்த நடவடிக்கைக்கு பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த காலதாமதத்தால் அணு உலையில் உள்ள அனைத்து கருவிகளும் முன்புபோல் சரியாக வேலை செய்கிறதா? என்பதை மறுபரிசோதனை செய்து பார்த்தோம். இந்த சோதனையும் 95 சதவீதம் வரை முடிந்துவிட்டது.

அடுத்தக்கட்டமாக கோர் கூலிங் சிஸ்டம் என்ற பரிசோதனையை மேற்கொள்ள உள்ளோம். இதனை ஒருங்கிணைந்த அணு உலை குளிரூட்டும் சோதனை என்று கூறுவார்கள். ஒரு வாரத்தில் இந்த சோதனையை நடத்த இருக்கிறோம். அதன் பிறகு, இந்திய அணு மின்சார ஒழுங்குமுறை வாரியத்துக்கு அறிக்கை அனுப்புவோம். ஏற்கனவே வெப்பநீர் சோதனை குறித்தும் அறிக்கை அனுப்பி இருக்கிறோம்.

இந்த அறிக்கைகளின்படி அணுமின்சார ஒழுங்குமுறை வாரியம் முறையான ஒப்புதலை அளிக்கும். அதன் பின்னர் அணு உலையில் நிரப்பப்பட்டு இருக்கும் மாதிரி எரிபொருளை அகற்றிவிடுவோம். பின்னர் யுரேனியம் எரிபொருளை நிரப்புவோம்.

யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும். அதன் பிறகு மின் உற்பத்தி தொடங்கப்படும். ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது இன்னும் 2 மாதங்களில், அதாவது ஜூன் மாதம் கடைசியில் அல்லது ஜூலை மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்.”

ஆபத்தான அணு உலை வேண்டாம் என அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துப் போராடியதால் அப்பகுதி மக்கள் வேலை இழந்தார்கள், உணவை இழந்தார்கள், வருமானத்தின் ஒரு பகுதியை போராட்ட நிதியாகக் கொடுத்து வருமானத்தை இழந்தார்கள். தற்போது வழக்கு, கைது, சிறை துன்பங்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாகிறார்கள்.
கூடங்களம் அணு உலையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டம் அனைத்து மக்களுக்குமானது. இந்திய ஆளும் வர்க்கத்தின் அணு குண்டு, வல்லரசு கனவு, மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால்தான் அரசு இயந்திரங்களும் அதன் அடிவருடிகளும் அப்போராட்டத்தை ஒருசேர ஒடுக்க முயல்கிறார்கள். சாலை மறியல் செய்த பெண்கள், சிறுவர்கள், நோயுற்றவர்கள், உள்பட கூட்டப்புளி மக்கள் 178 பேர் மீது தூக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவில் சிறையில் அடைக்கிறார்கள். தலைக்கு இருவர் என 356 பேர் வள்ளியூர் நீதிமன்றம் வந்து ஜாமீன் கொடுத்து பிணையில் வந்தாலும், தினமும் காலையில் கொடும் குற்றவாளிகளைப் போல் காவல் நிலையத்தில் கையெழுத்திடச் செய்கிறார்கள். பிணையை தளர்த்த நீதிமன்றம் சென்றால் ஒரு மாதம் கழித்து வாருங்கள் அது எனது கொள்கை என அறிவிக்கிறார்கள். பேருந்து வசதியில்லாத பாதையில் பழவூர் காவல் நிலையத்திற்கு காலை 10-00 மணிக்கு சென்று தினமும் கையெழுத்து போட்டால் பிழைப்புக்கு கடலுக்கு எப்படி செல்வது? குடும்பத்திற்கு கஞ்சி யார் ஊற்றுவது? ஆனால் மக்களின் இப்பிரச்சினைகள் பற்றியும் வாழ்க்கை குறித்தும் அரசு இயந்திரத்திற்கு மயிரளவும் கவலை கிடையாது.
தொழிற் துறை வளர்ச்சியடைந்தநாடுகள் எங்கும் அணு உலைகள் மூடப்படும் போது இந்தியாவில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அணு உலை கட்டிவைத்திருக்கிறார்கள்.

Exit mobile version