கூடங்குள அணுமின் நிலைய அணு கழிவுகளை கோலார் தங்கசுரங்கத்தில் சேமிக்க உள்ளதாக அறிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் அணு கழிவுகள் பொதுமக்களின் உடலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதை எந்த இடத்தில் சேமிப்பீர்கள் என்று விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் Ôகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணு கழிவுகளை கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், தங்கவயலில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத தங்க சுரங்கத்திற்கு சொந்தமான சுரங்கங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்படும். அதற்காக தனி மையம் அமைக்கப்படும்Õ என்று மத்திய அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கூடங்குளத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தங்கவயலுக்கு கழிவு கொண்டு வந்து சேமிப்பது என்ன நியாயம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நியுக்குலர் கழிவுகள் அழிய குறைந்த பட்சம் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளாகும். அதுவரை பாதுகாக்க முடியுமா? கர்நாடக அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு முன்னணி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்,
அணுக் கழிவுகளை இங்கு கொட்டினால் அதனால் மக்களுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றார்.