பிரபல இணைய தேடுதள நிறுவனமான கூகுள் மூலம், சீனாவில் உள்ளவர்கள் சீன அரசுக்கு சிக்கலை உண்டாக்கும் திபெத், தியான்மர் சதுக்க படுகொலைகள் மற்றும் மனித உரிமைகள் குழு போன்ற செய்திகள் மற்றும் தகவல்களை பெற முடியாதவாறு தடைவிதிக்கப்படிருந்தது.
சீன அரசின் நிர்ப்பந்தம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூகுள், மேற்கூறிய சேவைகளை சீனாவில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கூகுள் நிறுவன இணையதளத்துக்குள்ளாகவே சீன அரசு ‘ஹேக்’ செய்து ஊடுருவி தகவல்களை திருடி விட்டதாக அண்மையில் கூகுள் குற்றம் சாற்றியது.
இந்நிலையில் மேற்கூறிய கட்டுப்பாடுகள் மற்றும் ‘ஹேக்’ காரணமாக சீனாவில் தனது தேடுதள இணைய சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தது கூகுள்.
இதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் சீனாவிலிருந்து கூகுள் வெளியேற திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக சீன அரசு எந்த செய்திகள் மற்றும் தகவல்களை தமது நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது என தணிக்கை விதித்திருந்ததோ, அந்த தகவல்கள் உள்பட அனைத்து சேவைகளையும் ஹாங்காங்கில் உள்ள தேடுபொறி தளம் மூலம் சீன மக்களுக்கு இன்று திறந்துவிட்டது கூகுள்.
அதன்படி சீனாவில் உள்ள ஒருவர் தனது கணினியில் கூகுள் இணைய தேடுதள சேவை மூலம் தகவலை தேடினால், அதற்கான கட்டளை ஹாங்காங்கில் உள்ள தேடுபொறி தளத்திற்கு திருப்பிவிடப்பட்டு உரிய தகவல்கள் கிடைக்கிறது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சீனாவுக்கு மிகுந்த அதிர்ச்சியும், கூகுள் மீது ஆத்திரமும் ஏற்பட்டது.
இது குறித்து பீஜிங்கில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீன அரசின் இணைய தள சேவை பிரிவின் அதிகாரி, கூகுளின் இந்த நடவடிக்கை சீனாவுக்குள் நுழையும்போது அந்நிறுவனம் எழுத்து மூலம் அளித்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது என்று குற்றம்சாற்றினார்.
இதே வேளை இலங்கை அரசின் இணைய ஊடக அடக்குமுறைஜ்கான கருவிகளை சீன அரசு வழங்கி வருவதான குற்றச்சாட்டு எழுந்துள்ளதும் தெரிந்ததே.
அமரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ இன் தேடுதள சேவையும் கூகிள் ஊடாகவே நடத்தப்படுவதும், ஆப்கானிஸ்தான் ஈராக்கிய ஆக்கிரமிப்பு படுகொலைகள் போன்றவற்றில் அமரிக்க ஐரோப்பிய உளவு நிறுவனங்களின் இணையங்களே கூகுளில் முக்கியத்துவம் பெற்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.