இந்த ரசாயனப் பொருள் குழந்தைகளின், குறிப்பாக 3 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தில்லி சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு விதமான பொம்மைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்துப் பார்த்ததில், அவற்றில் பித்தலேட்ஸ் ரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது.
தில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதுகுறித்து இந்த மையத்தின் இயக்குநர் சுனிதா நரேன், இணை இயக்குநர் சந்திரா பூஷன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இங்கு செய்தியாளர்களிடம் கூறியது:
பொதுவாக, பொம்மைகளை குழந்தைகள் தங்களது வாயில் வைத்து விளையாடும். இதனால், பொம்மைகளில் கலந்துள்ள பித்தலேட்ஸ் எனப்படும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த ரசாயனப் பொருளால், குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா, நுரையீரல் பாதிப்புகள், இன விருத்தி உறுப்புகளில் கோளாறுகள், தோல் வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் ஏற்படலாம்.
ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட பொம்மைகளில் 45 சதத்துக்கும் மேற்பட்டவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பித்தலேட்ஸ் ரசாயனப் பொருள் அதிகளவில் இருந்தது.
ஆனால், இந்தப் பொம்மைகள் பெரும்பாலானவற்றில் “நச்சுத்தன்மையற்றது, பாதுகாப்பானது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிளாஸ்டிக் பொருள்களை மிருதுவாக்குவதற்காகவே பித்தலேட்ஸ் ரசாயனப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. எனவே, மிருதுவான, வளவளப்பான பொம்மைகள் குழந்தைகளுக்கு மிகவும் அபாயகரமானவை.
இந்திய தர நிர்ணய அமைப்பின் தரக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உள்படாத பொம்மைகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வருகிற 23 ஆம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில், எங்களது மையம் மேற்கொண்ட இந்தப் புதிய ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. பொம்மைகளில் பித்தலேட்ஸ் அளவு எவ்வளவு சதம் இருக்கலாம் என்பதை இந்திய தர நிர்ணய அமைப்பு வரையறை செய்யவில்லை. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை பொம்மைகளில் பித்தலேட்ஸ் அளவு 0.1 சதம் மட்டுமே இருக்கலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பே வரையறை செய்துள்ளன.
சீனா, தைவான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில்தான் அதிக அளவில் பித்தலேட்ஸ் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனப் பொம்மைகளில் 57 சதமும், தைவான் பொம்மைகளில் 100 சதமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பித்தலேட்ஸ் ரசாயனப் பொருள் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.