Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குளோனிங் ஆராய்ச்சிகளுக்கு ஒபாமா அனுமதி மறுப்பு.

12.03.2009.

வாஷிங்டன்: பலபடியாக்க (குளோனிங்) முறையில் மனிதரை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி மறுத்துள்ளார்.

குளோனிங் முறையில் ஆடு உள்ளிட்ட விலங்கினங்கள் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்டன.

அடுத்தகட்டமாக மனித கலங்களிலிருந்து (செல்) குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஒபாமா தெரிவித்தார்.

“ஸ்டெம் செல்’ தொடர்பான ஆராய்ச்சிக்கு அமெரிக்காவில் கடந்த 8 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தடையை விலக்கி ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான ஒப்பந்தத்தில் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.

ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்குத் தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பான ஜனாதிபதியின் ஒப்புதல் ஆவணத்தில் கையெழுத்திடுமுன் பேசிய ஒபாமா, தனது தலைமையிலான அரசு ஒருபோதும் மனித குளோனிங் ஆராய்ச்சிக்கு அனுமதி அளிக்காது என்று கூறினார்.

இத்தகைய ஆராய்ச்சியானது மிகவும் அபாயகரமானது. மேலும் தவறானதும் கூட.மனித சமூகம் இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதற்காக கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து அதை செயல்படுத்தவும் அரசு கடமைப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியை சாதாரண ஆராய்ச்சி போல அரசு எடுத்துக்கொள்ளாது. அறிவியல்பூர்வமாகவும், மனித சமூகத்துக்கு இந்த ஆராய்ச்சியால் பலன் விளையும் என்றால் மட்டுமே தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும். இந்த ஆராய்ச்சிப் பணிகள், இதிலிருந்து விலகி வேறு பாதைக்குச் செல்லாத வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு அமுல்படுத்தப்படும் என்றும் ஒபாமா கூறினார்.

 

Exit mobile version