Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

குற்றவாளியைத் தப்பிக்க வைப்பதில் இந்திய அரசு உறுதி

போபர்ஸ் பீரங்கி பேரத்தி்ல் தரகுப் பணம் பெற்ற ஒட்டோவியோ குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது என்கிற அரசின் முடிவில் மாற்றமேதுமில்லை என்று டெல்லி நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பி.பி.மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ளவர்களில் தற்போது உயிருடன் உள்ள ஒரே நபரான ஒட்டோவியோ குட்ரோக்கியை இந்தியாவிற்குக் கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், அவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறுவது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் டெல்லி பெருநகர முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவில் இன்றைக்கு தொடர்ந்த விசாரணையில் அரசு வழக்குரைஞர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் குட்ரோக்கியின் ஏ.இ.சர்வீசஸ் நிறுவனத்தின் கணக்கில் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டதை, வருமான வரித்துறையின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் உறுதி செய்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் அரசின் நிலையில் மாற்றமேதும் உண்டா என்று அரசு வழக்குரைஞரிடம் நீதிபதி வினோத் யாதவ் கேட்டிருந்தார். அதற்கு இன்று பதிலளித்து அரசு வழக்குரைஞர், ‘ஒட்டோவியோ குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவது என்ற அரசின் முடிவில் மாற்றமேதுமில்லை” என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

குட்ரோக்கிக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறக்கூடாது என்று உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் அஜய் அகர்வால் வாதாடி வருகிறார். அவருடைய வாதத்திற்குப் பிறகு இன்றே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version