இதேவேளை சிரிய எதிர்க்கட்சித் தலைவராகக் கருதப்படும் சிரிய தேசிய சபையின் தலைவரான அப்டெல் பசாத் ஈராக் பகுதியிலுள்ள குர்தீஷ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளார். ஈராக் குர்தீஷ்தான் போராளித் தலைவரான மௌசட் பார்சானியைச் சந்தித அவர், அமரிக்க ஆதரவுப் படைகளுடன் இணைந்து சிரிய அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்புக் குறித்து இனியொருவிற்குக் கருத்துத் தெரிவித்த PKK தோழர் ஜோசுவா, இதுவரை கிளர்ச்சிப்படைகளுடனோ, சிரிய அரச படைகளோடு PKK போராளிகள் இணைந்து செயற்படவில்லை என்றும் இனிமேலும் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார். PKK மக்கள் பலத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்றார்.அதேவேளை குர்திஷ்தான் போராளிகள் சிரிய எதிர்க்கட்சிக் கொடியோடு காண்ப்படுவதான படங்கள் வெளியாகியுள்ளன.
குர்திஷ்தானில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் துருக்கிய அரசு, PKK இற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்த அதே நேரத்தில் தாக்குதல்களையும் ஆரம்பித்தது. மோதலில் இரண்டு துருக்கிய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
சிரியாவிற்கு எதிராக அமரிக்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டுவந்த துருக்கி அரசின் நிலை சிக்கலானதாக மாற்றமடைந்துள்ளது. இது அந்தப் பிரதேசத்தில் புதிய அரசியல் நகர்வுகளுக்கு வழிகோலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1977 ஆம் ஆண்டிலிருந்து சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனைகளை தமது அடிப்படைக் கொள்கையாக வரித்துக்கொண்டது.
கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு ஒன்றில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை PKK ஆதரித்துத் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.