தமிழகத்தின் கும்பகோணம் பகுதியில் கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி என்னும் பெயரில் தனியார் பள்ளி ஒன்று ஓலைக்கொட்டகையில் இயங்கி வந்தது. கடந்த 2004, ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக் கொட்டகையில் தீ ஏற்பட்டு 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் பலத்த தீக் காயமடைந்தனர். இக்கொலையை ஒரு சாதாரண விபத்து வழக்காக மட்டுமே பதிவு செய்து விசாரணை நடத்தியது தமிழக அரசு, இந்நிலையில் 94 குழந்தைகள் கொலைக்குக் காரணமான கும்பகோணம் பள்ளித் தீ (விபத்து) வழக்கிலிருந்து தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் கண்ணன், மாவட்ட முன்னாள் முதன்மைக் கல்வி அலுவலர் முத்து. பள்ளியின் உரிமையாளர் பழனிச்சாமி உள்ளிட்ட மூவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். . இதுதொடர்பாக அந்தப் பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமி, அவரது மனைவியும், பள்ளித் தாளாளருமான சரஸ்வதி, பள்ளித் தலைமையாசிரியரும், பழனிச்சாமியின் மகளுமான சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல் உதவியாளர் வசந்தி ஆகியோர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர். இப்போது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்த இவர்கள் இப்போது குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுதலைச் செய்திருக்கிறது. கையில் அதிகாரமும், பை நிறைய பணமும் இருந்தால் நீங்களும் இப்படியான பள்ளி ஒன்றைத் துவங்கலாம். வகை தொகையின்றி குழந்தைகளைக் கொல்லலாம். உங்களை சட்டமோ, நீதித்துறையோ, அரசோ, எதுவும் செய்யாது.
பெற்றோர்கள் போராட்டம்
இந்தக் கொலைகள் தொடர்பாக 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 24 பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் முத்து பழனிச்சாமி, தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணன், தாசில்தார் பரமசிவம் ஆகிய 3 பேரை மட்டும் விடுவித்து உத்தரவிட்டார். மற்றவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.3 பேர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் இன்று, குழந்தைகள் நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 256 சாட்சிகள் உள்ளதாகவும், இந்த சாட்களில் ஒருவரைக் கூட, வழக்கு சம்மந்தமாக விசாரிக்கவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.