04.11.2008.
குடும்ப வன்முறையானது இன்று பரவலானதும் சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் ஒன்றாகவும் பரிணமித்துள்ளதுடன் சமூகத்திற்கு பெரும் சுமையாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அகஸ்டினோ பெரேரா குடும்ப வன்முறைகள் உலகெங்கும் வியாபித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வீட்டு வன்முறைகளுக்கெதிரான ஊடகங்களின் பிரதிபலிப்புகள் எனும் தொனியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை இலங்கை மன்றக் கல்லூரியில் ஆரம்பமான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுனிசெவ் நிறுவனம், உலக சுகாதாரத் தாபனம், பத்திரிகை பேரவை, குடும்ப புனர்வாழ்வு நிலையம் என்பன இணைந்து நடத்திய செயலமர்வில் பத்திரிகை பேரவையின் செயலாளர் ரோஹன சிறிவர்தன ஆரம்ப உரையையும், த ஐலன்ட் ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் டாக்டர் பிரசன்ன குரே அறிமுகவுரையையும் நிகழ்த்தினர்.
ஊடகவியலாளர்கள், பெண்ணிலைவாதிகள், சுகாதார திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்ட இந்த செயலமர்விற்கு டாக்டர் ஹெரல் ஜயவர்தன தலைமைதாங்கினார்.
டாக்டர் அகஸ்டினோ தொடர்ந்து உரையாற்றிய போது கூறியதாவது;
வன்முறை பற்றிய அறிவும் புரிந்துணர்வும் படிப்படியாக வளர்ந்து வருகிறது.
இத்துறையில் ஊடகத்தின் பங்களிப்பு அவசியமாகிறது. காரணம், அவர்களால் வன்முறை தடுப்பிலான வழிமுறைகளை நேர், எதிர்மறையாக வழங்க முடியும்.
ஊடகம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சமூக மாற்றத்திற்கும் வன்முறை பற்றிய செய்தி பரிமாற்றத்திற்கும் பாரிய பங்களிப்பு செய்ய முடியுமென்றார்.
இலங்கையில் வன்முறையும் சுகாதாரமும் பற்றிய தேசிய அறிக்கையின் சாராம்சத்தை விளக்கிய சுகாதார அமைச்சின் வன்முறைக்கெதிரான தேசிய கமிட்டியை சார்ந்த டாக்டர் டெரன்ஸ் டீ சில்வா பேசுகையில் கூறியதாவது;
வன்முறையானது பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்றது. அதனை தடுப்பதில் பல்வேறுபட்ட பங்காளர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
நடைமுறையில் இலங்கையில் ஒவ்வொரு வன்முறையையும் கையாளக்கூடிய பரந்தளவிலான தேசிய திட்டமில்லாதிருக்கிறது.
தனக்கு அல்லது வேறொரு நபருக்கோ, குழுவினருக்கோ அல்லது சமூகத்திற்கு எதிராக இயல்பாக அல்லது உடல்ரீதியான பலாத்காரமே வன்முறையாகும்.
பன்முகங்கொண்ட வன்முறைகளைக் தடுப்பதற்கு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் பணி அவசியமாகும் என்றார்.