திருச்சி அருகில் உள்ள சிறுகனூர் பகுதியில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநில மாநாடு ரத்து செய்யப்பட்டது. ஆனால், இன்று தொலை நோக்குத் திட்டங்கள் அறிவிக்கும் மாநாடாக இது திமுகவால் அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மாநடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொருளாதாரம், சுற்றுசூழல், சமூக நீதி, விவசாயம் என பல்வேறு தலைப்புகளில் அறிவுலகினர் உரையாற்றினார்கள். இன்று காலை மாநாட்டுத் திடலில் கொடியேற்றிய மு.க ஸ்டாலின் பின்னர் மாலை மாநாட்டின் இறுதி உரையாற்றினார்.
“ தமிழகத்தின் எதிர்காலமாக திமுகவின் திருச்சி மாநாடு அமைந்துள்ளது. துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி. பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உள்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய 7 துறைகள் முக்கியமானவை. தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும்.கடலளவு திமுக செய்துள்ள சாதனைகளை சொல்ல தனி மாநாடுதான் போட வேண்டும்.பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும். பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும். நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு. அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.