தமிழ்நாட்டில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மதுவிற்பனையாகி சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி வரும் 22-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மற்றும் ஓட்டல் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலையொட்டி 10 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மட்டும் ரூ 100 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழ்ப்புத்தாண்டு மதுவிற்பனையில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் (பிராந்தி, விஸ்கி, ரம்) 2 லட்சத்து 14 ஆயிரம் பெட்டிகளும், பீர்பாட்டில்கள் 1 லட்சத்து 27 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையாகி இருக்கின்றன.
இந்த மாதம் 1–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை ரூ.970 கோடிக்கு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் பீர்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் நெருங்கிக்கொண்டு இருப்பதால், மதுவிற்பனையும் வழக்கத்தை விட கூடுதலாக உள்ளது.