எமது நீராதாரத்தைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து விரைவாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கவனயீர்ப்பு நிகழ்வு கலந்துகொண்டோர் ‘மாசற்ற சுத்தமான நீர் வேண்டும், எதிர்கால சந்ததிக்காக நீரை பாதுகாப்போம், எமக்கு இரசாயனம் கலந்த குடிநீர் வேண்டாம், எண்ணெய் கழிவுகளற்ற நீரே எமக்குத் தேவை என வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளுடன் காணப்பட்டனர்.
குடிநீருக்கான உரிமை என்ற அடிப்படை முழக்கத்திற்கும் அப்பால் எம்ரிடி வோக்கஸ் என்ற பல்தேசிய நிறுவனம் பேரினவாத அரசுடன் இணைந்து நடத்திய சுற்றாடலை மாசுபடுத்தும் குற்றச்செயலுக்குத் தண்டனை வழங்குவதே இவற்றை முற்றாக நிறுத்துவதற்குரிய ஒரே வழி முறை.
மேற்குறித்த போராட்டம் தேவையானதே. புலம் பெயர் நாடுகளில் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்படும் போராட்டங்களும் பிரச்சார நடவடிக்கைகளும் இலங்கையில் நடத்தப்படுவதே சரியானது. வெள்ளவத்தையில் இலங்கை வர்த்தக வங்கியின் முன்னால் நடத்தப்பட்ட போராட்டம், இலங்கை மின்சார சபையின் முன்பாகவோ, அன்றி எம்.ரி.டி வோக்கஸ் இன் தலைமையகத்தின் முன்பாகவோ நடத்தப்பட்டிருந்தால் மேலும் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும்.