Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கைப் பிரிக்கும் கருணாவும் விக்னேஸ்வரனும்

cvvikiஇலங்கை அரச பேரினவாதம் காலனியாதிக்கத்தின் பின்னர் தமிழர்களைச் சிறுகச் சிறுக அழித்து கிழக்கில் பெரும்பான்மையை சிதைத்தது. தமிழ்த் தேசியம் என்பது யாழ்ப்பாண மேலாதிக்கவாதமாக உருவெடுத்த போதும் கிழக்குமாகாண மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக இணைந்துகொண்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி தோன்றிய காலத்திலிருந்தே கிழக்கு, தமிழ்த் தேசியத்தின் புறக்கணிப்பிற்கு உள்ளானது. இலங்கைப் பேரினவாதப் பாசிச அரசுகளின் ஒடுக்குமுறையால் அதிகாமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கைப் புறக்கணித்த தமிழ்க் குறுந்தேசிய வாதிகளின் நடவடிக்கைகளை இலங்கை அரசு பயன்படுத்திக்கொண்டது. கருணா போன்ற பிழைப்புவாதிகளை ஊட்டி வளர்த்தது. தமிழ்ப் பேசும் மக்கள் திட்டமிட்டுச் சிறுப்பான்மையாக்கப்பட்ட கிழக்குத் தொடர்பான பாசிச அரசின் நடவடிக்கைகளைப் நியாயப்படுத்தும் உச்சம்வரை கருணா, பிள்ளையான் போன்றோர் வளர்க்கப்பட்டனர்.
கிழக்கிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலை ஏற்றுக்கொண்டு அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று தமிழ்ப் பேசும் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டதாக மார்தட்டிக்கொள்ளும் விக்னேஸ்வரன் கிழக்குக் குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.
இதற்குத் துணைபோகும் தமிழின அடிப்படைவாதிகள் விக்னேஸ்வரனை விமர்சிப்பதோ கிழக்குக் குறித்துப் பேசுவதோ கிடையாது. கிழக்கு மக்களைக் கையேந்தும் நிலைக்குள் தள்ளியுள்ள ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள், இலங்கை அரச படைகளின் இனச்சுத்க்திகரிப்பிற்குத் துணைபோகின்றன. தேசிய இனம் குறித்த அக்கறையோ மக்கள் பற்றோ அற்ற பிழைப்புவாதிகள் இது குறித்துப் பேசுவதில்லை.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரச அடியாள் கருணா, வடமாகாண முதலமைச்சர் கிழக்கைப்பற்றிப் பேசுவதில்லை என பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியுள்ளார். மட்டக்களப்பு படுவான் கரையில் அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலேயே விக்னேஸ்வரன் குறித்துக் கருணா இவ்வாறு பேசியுள்ளார். கருணாவும் விக்னேஸ்வரனும் ஒருவரை ஒருவர் ஊட்டி வளர்க்கின்றனர்.

Exit mobile version