Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு மாகாணத்தில் சிங்கள அதிகாரிகளே தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகாரிகள்!

கிழக்கு மாகாணத்தில் 75 சத வீதத்திற்கு மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ள போதிலும் மாகாண கல்வி அமைச்சில் தீர்மானங்களை எடுக்கும் உயர் அதிகாரிகளாக சிங்கள அதிகாரிகளே இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்துகின்றது.

இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில், இந்நிலை உடனடியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கிழக்கு மாகாணத்தில் 718 தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 134 மாணவர்களும் 240 சிங்கள மொழி மூல பாடசாலைகளில் 71 ஆயிரத்து 450 மாணவர்களும் கல்வி கற்கின்றார்கள்.தமிழ் மொழி மூல ஆசிரியர்களாக 15 ஆயிரத்து 302 பேரும், சிங்கள மொழி மூல ஆசிரியரக்ளாக 4 ஆயிரத்தி 440 பேரும் கடமையாற்றுகின்றார்கள்

இப்படியான சூழ்நிலையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் தீர்மானங்களை எடுக்கும் முக்கிய பொறுப்புகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர்.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் மூன்று பேர் உள்ளனர். இவர்களால் தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினையை எவ்வாறு கையாள முடியும் என்பது தற்போதுள்ள பிரச்சினையாகும்.

தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் தமது தாய் மொழியில் தமது பிரச்சினைகள் குறித்து கடிதங்கள் எழுதும் போது மொழி பெயர்க்கப்பட் கடிதங்களையே அவர்கள் iகாயள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

நாட்டின் கடந்த காலங்களில் இடம் பெற்ற அநேகமான பிரச்சினைகளுக்கு இன ரீதியாக தீர்மானம் எடுக்கும் பிரதிநித்துவம் இல்லாமையே காரணமாகும்.

இந் நிலையில் இதனை மாற்றியமைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.” என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாண கல்வி அமைச்சைப் பொறுத்த வரை தீர்மானங்களை எடுப்பவர்களாக 60 வயதுக்கு மேற்பட்ட, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் அதிகாரிகளே தற்போது உள்ளனர்.இதனால் தமிழ்ப் பேசும் ஆசிரியர்கள் நிர்வாக ரீதியாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

மொழி பெயர்ப்பில் ஏற்படும் தாமதங்கள்,தவறுகள் என பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுக்கின்றார்கள். இதற்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்ப் பேசும் அதிகாரிகளும் தீர்மானங்களை எடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இதனை அம் மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிந்திருந்தும இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் இருப்பது கவலைக்குரியது. எமது தொழிற் சங்கத்திற்கு அங்கிருந்து இது தொடர்பான புகார்கள் பரவலாக கிடைக்கும் போது இவர்களை அது சென்றடையாமல் இருக்குமா?

இதற்குத் தீர்வு காண வேண்டுமென்றால் எமது சங்கம் சில கோரிக்கைகளை மாகாண கல்வி அமைச்சின் முன் வைக்கின்றது:

* குறிப்பாகத் தீர்மானம் எடுப்பதற்கு தமிழ் மொழி மூல அதிகாரிகளும் நியமிக்கப்பட வேண்டும்.

* தீர்மானம் எடுக்கும் அதிகாரிகளாக தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரும் சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

* தற்போது சேவையிலுள்ள 78 கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளில் 10 பேர் பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றுவதால் அவர்களும் கல்வி நிர்வாகத்திற்குள் உள்வாங்கப்பட்டு சகல இனத்தவர்களையும் உள்ளடக்கிய வகையில், நிர்வாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு சகல தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடியும்” என்றார்

Exit mobile version