Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு மாகாணத்தில் ஆணைக்குழு : துயரங்களின் சாட்சியம்

அநிதிகளையே வாழ்வாகக் கண்ட மூதாட்டியின் சாட்சியம்.

கணவரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர், மகனை சீருடை தரித்தவர்கள் கடத்திச் சென்றனர், மருமகனைத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். சுட்டவரை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன். மகளை கருணா குழுவின் சீலன் கடத்திச் சென்றார். மகளைக் கடத்திய சீலனிடம் கேட்டபோது, இனிமேல் வந்தால் வீட்டிற்கு குண்டு வைப்போம் என மிரட்டினார். இயக்கப் பொறுப்பாளர்களைச் சந்தித்துக் கேட்டபோது தூசனத்தால் ஏசினார்கள். கடத்தப்பட்ட மகள் பற்றி இதுவரை எதுவித தகவலும் தெரியவில்லை. பொலிஸில் முறைப்பாடு செய்த போதும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மூதாட்டி ஒருவர் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பிரதேச செயலகத்தில் 11.10.2010 திங்கட்கிழமை நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணகைகுழுவின் அமர்வில் சாட்சியமளித்த வேளையிலேயே மூதாட்டி தனது குடும்பத்தினருக்கு நடந்த அநீதிகளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தந்தையை காணமல் தவிக்கும் மகனின் சாட்சியம்

வியாபாரியான எனது தந்தை 12.11.2007 அன்று கறுவாக்கேணிக்கு சென்ற வேளை கடத்தப்பட்டார். அப்பாவின் நண்பர்களைச் சந்தித்து விசாரித்த போது, அப்பா சித்தாண்டியைக் கடந்து சென்றதைக் கண்டதாகவும் கிரான் கருணா குழுவினர் அவரை விசாரணை செய்ததாகவும் கூறினார்கள். சம்பவம் நடந்த சில தினங்களின் பின் கருணா குழுவசை சேர்ந்த அஜன் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து அப்பாவை தீவுச்சேனைப் பகுதியில் வைத்திருப்பதாகவும் அப்பாவை மீட்டுத்தருவதாகக் கூறி கடவுச் சீட்டையும் வாங்கிச் சென்றார். அஜன் ஏறாவூர்ப் பிரதேச சபையின் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் காலத்தில் சில உதவிகளைக் கேட்டார். நான் அதைச் செய்து கொடுத்தேன். ஆயினும் எனது அப்பா இதுவரை வீடுதிரும்பவில்லை என ஏறாவூரைச் சேர்ந்த தந்தையை காணமல் தவிக்கும் மகனொருவர் சாட்சியமளித்துள்ளார்.

கடத்தப்பட்ட கணவனை மீட்க என்ன செய்வதென்று தெரியவில்லை – மனைவியன் சாட்சியம்

எனது கணவர் 23.05.23 அன்று அக்காவின் வீட்டிற்குச் சென்று விட்டுத்திரும்புகையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார். சம்பவம் நடைபெற்ற மறுதினம் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காகச் சென்ற வேளை, உனது புருசனை மறைத்து வைத்து விட்டு எங்களிடம் முறைப்பாடு செய்ய வந்திருக்கிறாய். கணவன் வீடு திரும்பியதும் உன்னைப் பிடித்து அடைத்து வைப்போம் எனக்கூறினார்கள்.
சில தினங்களின் பின்னர் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமிலுள்ள புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சின்னவன் சதீஸ் என்பவர் வீடட்டிற்கு வந்து, உனது கணவர் முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிப்பதாகக் கூறி ஜம்பதாயிரம் ரூபா பணத்தையும் பெற்றுச் சென்றார். அவர் வாகன விபத்தில் பலியாகிவிட்டார். கணவரை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் இருக்கிறேன் என ஜயங்கேணியைச் சேர்ந்த பெண்ணொருவர் சாட்சியமளித்துள்ளார்.

செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஆணகை;குழுவின் அமர்வில் சாட்சியமளிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். பெரும்பாலோனோர் பெண்கள். அதுவும் கைக்குழந்தையுடன். எனினும் வருகை தந்த அனைவருக்கும் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பலருக்கு மனுக்களைக் கையளித்து விட்டு திரும்பும் நிலையே ஏற்பட்டது. ‘சாட்சியமளிக்க வந்த எங்களுக்கு ஏன் சாட்சியமளிக்க முடியாது” என அதிகாரிகளுடன் சிலர் முரண்பட்டனர். அவர்களில் சிலருக்கும் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சாட்சியங்கள் காலை 8.30 முதல் 12.10 மணிவரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கடத்தப்பட்டவர்கள், காணமல் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியே அதிகமானோர் சாட்சியமளித்துள்ளனர். ஆணைக்குழுவிடம் கடத்தப்பட்ட, காணமல் போன எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீருடன் உறவினர்கள் மன்றாடினார்கள்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினர் மேற்கொண்ட கடத்தல் தொடர்பாக கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் இரகசியமாகவும் சாட்சியமளித்தனர்.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, ‘நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறியவே ஆணைக்குழுவினை ஜனாதிபதி நியமித்துள்ளார்” எனத்தெரிவித்திருக்கிறார். மேலும் ‘பிரச்சினைக்காண மூலகாரணத்தைக் கண்டறியவே ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது, இந்த ஆணைக்குழுவில் அரசியல் வாதிகள் உள்ளிட்ட சமூக அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் சாட்சியமளிக்கின்றனர். இதன் மூலம் பதிய யோசனைகள் முன்வைக்கப்படும். அவற்றை நாங்கள் பரிசீலிக்கலாம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version