Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே செய்ய முடிகிறது:ஏ.எம்.ஜெமீல் .

07.03.2009.

 “கிழக்கு மாகாண சபையை இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் சேவையாற்றும் உயிரோட்டமுள்ள அத்தியாவசியமான சகல அதிகாரங்களும் கொண்ட மாகாண சபையாக மாற்ற வேண்டும். தற்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கதிரைகளை சூடேற்றும் கைங்கரியத்தை மட்டுமே செய்ய முடிகிறது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கல்முனை மாநகர வைத்தியசாலை அடிக்கல் நாட்டு விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொணடு உரையாற்றும் போது தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில்;

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரியை பெற்று பின் இக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் எதிர்வரும் தேர்தலில் ஓரம் கட்டுவதே எமது நோக்கமாகும்.

இன்று கிழக்கு மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமையால் அது பொம்மைகளின் காட்சிக் கூடமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.இதனை அரசாங்கம் உடனடியாக உயிரோட்டமுள்ள மக்களுக்கு சேவையாற்றக் கூடிய சபையாக மாற்றவேண்டும்.

கிழக்கு மாகாண சபைக்கு தேவையான அதிகாரங்களை வழங்குங்கள் என முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகு தாவுத் தலைமையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் போராடி வருகின்றோம்.

எங்களை நம்பி வாக்களித்த கிழக்கு மாகாண மக்களுக்கு எதையாவது நாங்கள் செய்ய வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை ஏமாற்றுவதனை தவிர்த்து மக்களின் அத்தியாவசியமான தேவைகளை அடையாளம் கண்டு நிறைவு செய்து கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர பிரதேச மக்களின் நன்மை கருதி நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வைத்தியசாலை மூலம் அனைவரும் சிறந்த பயன்களைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version