Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியத்துடன் அணிதிரண்டுள்ளனர் : மாவை சேனாதிராஜா

சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த தாயகத்தில் நாம் ஓர் அரசியல் தீர்வை அடைவதற்குரிய அடிப்படையை விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசின் பிரதமரும் நீங்கள் உங்களது அடிப்படைகளை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காமல் அரசுடன் பேசவேண்டுமென்றே எம்மிடம் கூறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன அரசு பக்கம் தாவியதன் பின்பான நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அம்பாறை மாவட்ட முக்கியதஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலேயே இவ்வாறு பேசியிருக்கிறார்.
தொடர்ந்து அங்கு பேசிய மாவை சேனாதிராஜா, வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்து விட்டோமென சொன்ன பிறகும், பிள்ளையானின் தலைமையில் கிழக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பிறகும், கருணா அமைச்சராகப் பவனி வந்த போதிலும் கிழக்கு மாகாண மக்கள் தடம்புரளாது உறுதியுடன் தமிழ்த் தேசியத்துடன் நாம் வடக்கு கிழக்கு மக்கள், தந்தை செல்வாவிற்குப் பின்னால் அணிதிரண்ட சமதாயம் என்பதை நிரூபித்துள்ளார்கள் எனவும் கூறியிருக்கிறார்.

இக்கூட்டத்தில் பேசிய பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், கடந்த பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாம் கலந்து கொண்ட போது அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த உணாச்சியை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய உணர்ச்சியை ஏனைய மாவட்டங்களில் நாம் காணவில்லை. இறுதிக் கூட்டங்களில் திருகோணமலையில் இத்தகைய உணர்ச்சியை ஓரளவுக்குக் கண்டேன் எனவும் இந்த நாட்டில் நாங்கள் ஒரு தேசிய இனமாக வாழ்கிறோம் என்ற உரிமையை எவரும் மறுக்க முடியாத என்ற உணர்வை நாங்கள் சரியான விதத்தில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுயமாக இயங்குபவர்கள். எங்களுக்கென்று ஓர் சுயாட்சியை நாம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கைக் கொண்டவர்கள். இதைத் தெட்டத்தெளிவாக நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறியுள்ளோம். அதற்குத் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும் பேசியிருக்கிறார்.
மேலும் பேசிய சுமந்திரன் போராட்டம் முடிந்திருக்கிறது. அரசு எதோச்சதிகாரமாக செயற்படுகிறது. எங்களைக் கண்டு கொள்ளவில்லை என்ற நிலையிலும் கூட நமக்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அரசு தனது முகத்தை வெளியுலகிற்குக் காட்ட வேண்டுமானால் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால்தான தொடர்ந்து எம் ஆதரவை அரசு தேடிக் கொண்டிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.

Exit mobile version