Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு உதயம்!;உண்மையில் அங்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை:ஜே.வி.பி. எம்.பி. பிமல் இரத்நாயக்க .

22.10.2008.

கிழக்கு உதயமென்று அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் மூலமே அரசு வெளிக்காட்ட முற்படுகின்றது. உண்மையில் அங்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை.

இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்கள் சம உரிமையுடன் வாழவேண்டுமென்பதை உலகிற்கு செயல்வடிவில் காட்ட வேண்டுமே தவிர அதனை விட்டு விட்டு கருணாவை பாராளுமன்ற உறுப்பினராக்குவதன் மூலம் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க தெரிவித்தார்.

கிழக்கிலுள்ள தமிழ்க்கிராமமான ஈச்சிலம்பற்றில் வீதி சீரின்மை, வைத்தியசாலை, பாடசாலை வசதியின்றி மக்களின் அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் ரூபவாஹினியில் மாத்திரம் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுவதாக காட்டப்படுகின்றது.

நாட்டில் தமிழ் , முஸ்லிம், சிங்களவர் சம உரிமையுடன் எந்தவித வேற்றுமையுமின்றி வாழ்வதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

நாட்டில் சிறுபான்மையினர் சம உரிமையுடன் வாழ்கின்றனர் என்பதை அரசாங்கம் செயல் வடிவில் உலகுக்கு காட்ட வேண்டும்.

அகதிகளுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை அவர்களது பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமே தவிர கருணாவை பாராளுமன்ற உறுப்பினராக்கி அதனைச் செய்ய முடியாது

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு பிரஜாவுரிமை வழங்குவது தொடர்பாக ஆராயும் புத்திஜீவிகளின் ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாஸ ஸ்போட்ஸ் ஹோட்டலில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பிமல் இரத்நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

யுத்தம் மற்றும் வேறு காரணங்களுக்காக இலங்கையர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளவர்கள் வசதிவாய்ப்புகளுடன் வாழ்கின்றனர்.

ஆனால் , திரும்பவருவது என்பது சாத்தியமில்லாத நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் எமது நாட்டு தமிழ் மக்கள் நாடு திரும்புவதற்கு ஆவலாகவுள்ளனர்.

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் 117 முகாம்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர். இதில் 28 ஆயிரத்து 500 பேர் இரு நாட்டினதும் பிரஜாவுரிமை இன்றி உள்ளனர்.

1984 ஆம் ஆண்டு சென்ற ஒரு குடும்பத்தின் பெற்றோருக்கு தமது நாடு குறித்து தெளிவாக தெரிகின்ற நிலையில் சிறுவர்களாக சென்ற இவர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை குறித்த தெளிவில்லாமலுள்ளது.

இவர்களது கல்வி, சுகாதார மேம்பாடு கீழ் நிலையில் உள்ளதுடன் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் எந்தவொரு உடன்படிக்கையும் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையில் செய்து கொள்ளாத நிலையிலும் இந்தியா எமது அகதிகளை நல்ல முறையில் இயலுமானவரை கவனித்து வருகின்றது. இதற்காக நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் மூலம் இவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை 2002 இல் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்டது. இவர்களை மீளக் கொண்டு வந்து மீளக்குடியேற்றுவதற்கு பாரியதொரு வேலைத்திட்டம் அவசியமானதாகும். முதலில் அம்மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணங்களிலிருந்து சென்றவர்களை மீண்டும் குறிப்பாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிலும் தற்போதைய நிலையில் மீளக்குடியேற்ற முடியாது. ஏனெனில் அங்கு உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களே இன்னும் அகதிகளாகவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அழைத்து வந்து மீண்டும் அகதி முகாமில் தங்கவைக்க முடியாது.

எமது நாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version