அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் போது பொலீசாருக்கும்,மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்தும், அதன் பின்னர் யாழ். பல்கலைகழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையை கண்டித்தும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(03.12.2012) ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வீதியோரத்தில் நடைபெற்றுவரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ‘மாணவர்களை கைது செய்யாதே’ ‘இதுதான் இலங்கையின் ஜனநாயகமா?’ ‘கற்க வந்த மாணவர்களை எதற்கு தாக்கினாய்’ ‘கைது செய்த மாணவர்களை விடுதலை செய்’ ‘இராணுவமே மாணவர் விடுதிக்குள் உனக்கென்ன வேலை’ ஜனநாயக நாட்டில் அராஜகம் எதற்கு’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கைது செய்த மாணவனை விடுதலைசெய் என்ற கோசங்களுடன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து யாழ். அரச மருத்துவ சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் உடனே விடுதலை செய்வதன் மூலம், யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் யாழ். அரச மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.