28.11.2008.
கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு, மாகாண முதலமைச்சரும் பாதுகாப்புத் தரப்பினருமே பொறுப்புக் கூற வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது; பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் அப்பாவித் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் கொலைகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் பாதுகாப்பு அதிகாரிகளும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் படுகொலையைத் தடுத்துநிறுத்த கிழக்கு மாகாண அமைச்சரவையை உடனடியாக கூட்டி பிரதிப் பொலிஸ் மா அதிபரையும் அழைத்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மக்கள் இடம்பெயர்ந்து சொத்து சுகங்களை இழந்து மீள்குடியேற்றப்பட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பகுதியில் குடும்பம் குடும்பமாக வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகளுக்கு முதலமைச்சரும் பாதுகாப்பு அதிகாரிகளுமே பதில் கூற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் வீதிக்கு வர அஞ்சுகின்றனர். பயப்பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டுமென கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது நானும் மேலும் பல உறுப்பினர்களும் கேட்டிருந்தோம். ஆனால், இதனை நிறுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. இவற்றை முதலமைச்சரினால் நிறுத்த முடியும் என்பதற்கான சாத்தியமுமில்லை. கிழக்கு மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, அப்பாவிப் பொது மக்கள் ஈவிரக்கமின்றிக் கொலை செய்யப்படுவதை நிறுத்த உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி பிரதிப் பொலிஸ் மா அதிபரையும் அழைத்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.