மட்டக்களப்பு பாவற்கொடிச் சேனை விநாயகர் வித்தியாலய ஆசிரியரின் படுகொலையினை வன்மையாக கண்டித்துள்ள கிழக்கு மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அ.சசிதரன் கிழக்கில் அரசு ஊட்டி வளர்க்கும் ஆயுதக் கலாசாரம், தலைவர்கள், சமூகத்தவைவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பலரையும் பலி எடுத்துச் செல்கின்றது.
இந்த ஆயுதக் கலாசாரத்தை அரசு முடிவுக்கு கொண்டுவரும் வரை கிழக்கு மக்களுக்கு நிம்மதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.
காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த ப.ரவிந்திரராசா என்ற ஆசிரியர் இனந்தெரியாத மோட்டார் சைக்கிளில் தலைக் கவசம் அணிந்த ஆயுததாரிகளால் வழிமறித்து சுட்டுக் கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் ஆயுத கலாசாரம் பல உயிர்களை காவு கொண்டு வருவதுடன் மாணவர்களின் கல்வியையும் சீரழிக்கின்றது.
இந்த ஆயுத கலாசாரத்தினாலேயே மாணவி வர்ஷா, தினுஷிகா உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து அடிப்படை வசதிகளற்ற ஆசிரியர்கள் செல்ல பின் நிற்கும் வவுணதீவுப் பிரதேசத்தின் நீண்ட தொலைவில் கடமையாற்றும் ஆசிரியரான ஒரு பிள்ளையின் தந்தையான ப.ரவிந்திரராசா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச் செயலால் கல்வியின் பின்தங்கிய பிரதேசமாகிய வவுணதீவுப் பிரதேசத்தின் கல்வி மேலும் பாதிக்கப்படவுள்ளது தினுஷிகாவின் படுகொலையால் பாடசாலைகள் இயங்கவில்லை. தற்போது ஆசிரியரின் கொலையாலும் பாடசாலை கல்விக்கு பாதிப்பு ஏற்படவுள்ளது. அப்பகுதி மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிகின்றேன்.
இவ்வாறான மோசமான கொலைகளுக்கு அரசே பொறுப்புக் கூறவேண்டும். ஆயுத கலாசாரத்தை அரசே வளர்க்கிறது. சாதாரணமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பகல்வேளை சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு அரச படைகள் நிற்கும் பகுதியை நோக்கி ஆயுததாரி சென்றுள்ளார் என்றால் அப்பகுதியில் உள்ள படையினரின் ஆசிர்வதத்துடன் தான் ஆயுதங்களை இவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பது புலனாகின்றது.
பொதுமக்களின் இந்த பரிதாபமான கொலைகளை தவிர்க்க அரசு கிழக்கில் இடம்பெறும் ஆயுத கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
இந்த ஆசிரியரை கொலை செய்த கொலையாளியை பொலிஸார் கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டும். தினுஷிகாவின் கொலையுடன் தொடர்புடையோரை கண்டுபிடிக்க பொலிஸார் எடுத்த முயற்சியினை நான் பாராட்டுவதுடன் இந்த கொலையாளியையும் கண்டு பிடித்து மக்களுக்கு இனங்காட்டி தண்டிக்க வேண்டும். இதனை பிரதி பொலிஸ்மா அதிபர் எரிசன் குணதிலக முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.