Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட பின்னரும் அங்கு திரும்பிச் செல்லாதவர்களின் விபரங்களை அறியவே இந்த பதிவு நடவடிக்கை:ரஞ்சித் குணசேகர.

05.09.2008.

2003ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்து தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கியுள்ள அனைவரும் பதிவு செய்ய வேண்டியது அவசியம். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட பின்னரும் அங்கு திரும்பிச் செல்லாதவர்களின் விபரங்களை அறியவே இந்த பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் தங்கியுள்ள கிழக்கு மாகாண மக்களை பொலிஸில் நாளை பதிவு செய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கான காரணம் குறித்து கேட்டபோதே பொலிஸ் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது கடந்த 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு உட்பட மேல்மாகாணத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவே தங்கியுள்ள அனைவரும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். கிழக்கு மாகாணத்தின் மட்டகி“களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்துள்ள தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவருமே இந்த பதிவினை மேற்கொள்ள வேண்டும்.

அந்த மாகாணத்திலிருந்து இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதிகளிலிருந்து வெளிமாவட்டங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்தனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்தும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மேல்மாகாணத்தில் தங்கியுள்ளனர்.

கிழக்கில் தற்போது ஏற்படுத்தப்பட்டு அமைதியான சூழல் உருவாக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வந்தவர்கள் இன்னமும் இங்கேயே தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக இங்கு தங்கியுள்ளார்கள் திரும்பிச் செல்லாமைக்குக் காரணம் என்ன? எப்போது திரும்பிச் செல்வார்கள் எதற்காக தொடர்ந்தும் இங்கு தங்கியுள்ளார்கள்? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் வகையிலேயே இந்த பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நாளை 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பதிவுகளுக்கு உட்படுத்தப்படும் மக்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களிலோ அல்லது பதிவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனிப்பட்ட இடங்களிலோ பதிவுகளை மேற்கொள்ளலாம்.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் இதர மாகாணங்களிலிருந்த மேல்மாகாணத்துக்கு வந்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்கியுள்ளவர்களும் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற பதிவுகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் கிழக்கு மாகாண மக்களின் பதிவினை அடுத்து மேற்கொள்ளப்படவுள்ளன

Exit mobile version