Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது அதிகரிப்பு.

25.11.2008.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் சித்தாண்டிப் பகுதிகளிலேயே இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

ஞாயிறு இரவு 7 மணியளவில் மண்முனைப்பற்று வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஒல்லிக்குளம் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த, அரச சார்பற்ற நிறுவனமொன்றின் வாகனச் சாரதியான அமரசிங்கம் கிரிதரன்(28 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் பின்னர் காத்தான்குடி பொலிஸாரால் எடுத்து வரப்பப்பட்டு மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது.

இதேநேரம், சித்தாண்டியில் தேவாலயத்திற்கு அருகில் இரவு 7.30 மணியளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த ஆயுதபாணிகளே இவரை வழி மறித்துச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.

சித்தாண்டி வேலாயுதம் வீதியைச் சேர்ந்த செல்லத்தம்பி வேலாயுதம் (32 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் செங்கலடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

இதேநேரம், ஞாயிறு இரவு 8.30 மணியளவில் கொக்கட்டிச்சோலை அரசடித் தீவு பகுதியில் இளம் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகள் இவரை வீட்டுக்கு வெளியே அழைத்து சிறிது நேரம் உரையாடிவிட்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.

நாகலிங்கம் இரட்ணசிங்கம் (30 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் பின்னர் மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அண்மைக் காலமாக கிழக்கில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது.

 

Exit mobile version