Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கிலிருந்து வந்த குழு வாக்களிக்க வேண்டாமென அச்சுறுத்தல்!

09.08.2008.

வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு மக்கள் அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

அநுராதபுர மாவட்டத்திலேயே அதிகளவில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. பொல நறுவை மாவட்டத்தில் எல்லைப்புறமாகவுள்ள தமிழ், முஸ்லிம் கிராமமக்களை தேர்தலில் பங்குபற்ற வேண்டாமென ஒரு குழுவினர் அச்சுறுத்தி வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறை தொடர்பில் கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதேவேளை நாளுக்கு நாள் வன்முறைகளும் அதிகரித்து செல்கின்றது. மனுதாக்கல் செய்யப்பட்டது.

முதலில் இதுவரை தேர்தல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பில் மொத்தமாக 122 முறைப்பாடுகளை நாம் பதிவு செய்துள்ளோம்.

இதில் 82 தேர்தல் வன்முறைகளும் 30 அரச சொத்துகள் துஷ்பிரயோகமும் அடங்குகின்றன. இரு மாவட்டங்களில் வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவான வன்முறைகள் இடம் பெற்றுள்ளன. அநுராதபுரம் பொலநறுவை மாவட்டங்களில் 68 வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பொலநறுவையில் கடந்த 3 தினங்களாக ஆங்காங்கு சில சம்பவங்கள் இடம் பெற்ற நிலையில், தற்போது அவை அதிகரித்துள்ளன.

சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முறையே 24 வன்செயல்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை 33 அரச சொத்து துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு கிழமை வரை தேர்தல் பிரசாரங்கள் சுமுகமாகவும் அமைதியாகவும் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது வன்முறைகள் அதிகரித்துள்ளன. நேற்று அதிகாலை எகலியகொடவில் ஜே.வி.பி.உறுப்பினர் துப்பாக்கி சூட்டுக்காயத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பொலநறுவை மாவட்டத்தின் எல்லையிலுள்ள தமிழ் முஸ்லிம் கிராம மக்களை தேர்தலில் பங்கு பற்ற வேண்டாமென அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க.மற்றும் ஐ.ம.சு.மு.ஆகிய கட்சிகள் தமக்கிடையில் மோதுவதால் தற்போது அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன.

கிழக்கு மாகாணத்திலிருந்து வந்த குழுவினரால் பொலநறுவையிலுள்ள தமது உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாக ஜே.வி.பி.முறையிட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக கபே தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றொரு சுயாதீன அமைப்பான பவ்ரல் 87 வன்முறை சம்பவங்கள் இதுவரை இடம் பெற்றுள்ளதாக தெரிவித்ததுடன் அநுராதபுரத்திலேயே ஆகக் கூடுதலான 32 முறைப்பாடுகளை தாம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version