26.10.2008.
கிளிநொச்சி நகரை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பின்னரே அரசியல் தீர்வு இதுபற்றி ஆராயப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசி;ங்காவுடன் வெள்ளியன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெளிவுபடுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கா இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தபோதே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு பதிலளித்திருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லாச் சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சாதகமான தீர்வுக்கு தமது ஆதரவு இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்காவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, எவ்வாறாயினும், கிளிநொச்சி நகரை புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பின்னரே இதுபற்றித் தாம் ஆராயப்படும் என்று கூறியிருப்பதாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.