Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிளிநொச்சி முழுமையாக இராணுவத்தினர் வசம்

கொழும்பு, ஜன. 2: விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ தலைநகரமான  கிளிநொச்சியை இலங்கை ராணுவம் இன்று கைப்பற்றியது. கிளிநொச்சிக்குள் நுழையும் வழியில் உள்ள  இரண்டு முக்கிய இடங்களை பிடித்த ராணுவம் மேலும் முன்னேறி சென்று, தலைநகரை கைப்பற்றி உள்ளதாகவும், அப்போது நடந்த சண்டையில் 50 புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
.
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள கிளிநொச்சி நகரம் விடுதலைப் புலிகளின்  அரசியல் மற்றும் ராணுவ தலைமை இடமாக இருந்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குப்பகுதி  ஏற்கனவே ராணுவத் தின் வசம் வந்து விட்டநிலையில், கிளிநொச்சியை பிடிக்க கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவம் கடும் போர் நடத்தி வருகிறது.
ராணுவத்துக்கு உதவியாக இலங்கை விமானப்படையும் அவ்வப் போது குண்டுவீச்சு நடத்தி வருகிறது.

ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகளும், உக்கிரமான போரில் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக இருதரப்பிலும்  ஆயிரக்கணக்கா னோர் கொல்லப்பட்டனர்.  கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வந்த இலங்கை ராணுவம் நேற்று புலிகளின் முக்கிய பாதுகாப்பு நகரான பரந்தனை பிடித்தது.

இன்று காலை மேலும் முன்னேறிய ராணுவத்தினர்  இரனமாடு பகுதியையும் மேலும் ஒரு முக்கிய பகுதியையும் பிடித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த விடுதலைப்புலிகள் கொரில்லா யுத்த முறையை பின்பற்றியதாகவும், எனினும் புலிகள் தரப்பில் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்ட தாகவும், சுமார் 50 பேர் உயிரிழந் திருக்கக்கூடும் என்றும், மேலும் 100 பேர் காயமடைந்திருக்க வேண்டும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவம் வடக்கு மற்றும்  தெற்கு பகுதியில் இருந்து  இரண்டு முனைகளிலும் கிளிநொச்சி நகரத்துக்குள்  நுழைந்ததையடுத்து கிளிநொச்சி ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் வந்திருப்பதாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இன்று காலை ராணுவம் கிளிநொச்சியில் நுழைந்ததை அனைத்து ஊடகங்களும் உறுதிப்படுத்தியிருந்தன. எனினும், புலிகளின் தரப்பில் இதுபற்றிய தகவல் ஏதும்  கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.  தமிழர்கள் அதிகம் வசித்த வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் கோலேச்சி கொண்டிருந்த விடுதலைப்புலிகள் கடந்த 25 ஆண்டுகளாக நடந்த இனப்போரில்  கொஞ்சம் கொஞ்சமாக தங்களது பகுதிகளை ராணுவத்திடம் இழந்து வந்தனர். 

கடந்த 10 ஆண்டுகளாக புலிகளின் தலைமையிடமாக  கிளிநொச்சி திகழ்ந்து வந்தது.  ராணுவ தலைமையிடமாகவும், அரசியல் தலைநகரமாகவும் திகழ்ந்த கிளிநொச்சியில், புலிகள் பல்வேறு கட்டிடங்களை உருவாக்கி தனி நாடாகவே அரசாங்கம் நடத்தி வந்தனர்.

புலிகளுக்கென தனி காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், வரிவசூல் அலுவலகங்கள் இயங்கி வந்ததுடன், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவையும் இயங்கி வந்தன.  தங்கள்வசம் இருந்த கிளிநொச்சி பகுதியையும் புலிகள் தற்போது இழந்துள்ளது விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சில தினங்களுக்கு  முன்பு  கிளிநொச்சியில் நடந்து வரும் சண்டை பற்றி தெரிவித்த புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் நடேசன்,  கிளிநொச்சி வீழ்ந்தாலும் போர் ஓயாது என்றும், விடுதலைப் புலிகள் கொரில்லா யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version