கிட்டத்தட்ட 6,000 பேரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கைது செய்தவர்களில் 1,400 முதல் 2,000 நபர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுடைய தாய்நாட்டிற்கும் அனுப்பப்படுவர்.
நேரில் பார்த்தவர்கள் பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளுக்கு கொடுத்துள்ள தகவல்படி, பொலிஸ் குழுக்கள் பெரும் மிருகத்தன்மையுடன் செயல்பட்டன. தமக்குத் தோன்றிய வகையில் பொலிசார் வெளிநாட்டினர் போல் தோன்றும் நபர்களை நிறுத்தி, சன்னல்கள் அற்ற பஸ்களில் ஏற்றினர். பல மணி நேரத்திற்குப்பின், அதிகாரிகள் அவர்களை சோதனைக்கு உட்படுத்தி அவர்களுடைய ஆவணங்களையும் சோதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று 88 பாக்கிஸ்தானியர்கள் உடனடியாக தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இவர்களில் பலர் நீண்டகாலமாக அனுமதி பெற்றுக் குடியேறியவர்கள். சிலர் குடியுரிமை கூடப் பெற்றிருக்கின்றனர். பொருளாதாரப் பிரச்சனையை எதிர்கொள்ள நிறவெறியைத் தூண்டிவிடுகிறது கிரேக்க அரசு. கிரேக்க அரசின் முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
பல மணி நேரம் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் முழந்தாளிட்டுச் செலவழிக்கும் இழிந்த காட்சிகள் குறித்தும் தகவல்கள் கூறுகின்றன. காவலில் இருப்பவர்கள்மீது பொலிஸ் அதிகாரிகள் வன்முறைத் தாக்குதல்கள் நடத்திய தகவல்களும் வெளிவந்துள்ளன.
UNHCR இன் ஏதேன்ஸ் பிரதிநிதி பெட்ரோஸ் மஸ்டகஸ், குடியேறுபவர்களின் உரிமைகளை பொலிஸ் நடவடிக்கை மீறுகிறது என சுட்டிக் காட்டினார். “தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பிற்கான அந்தஸ்த்திற்கு விண்ணப்பிப்பது என்பது மிகவும் கடினம், கிட்டத்தட்ட இயலாது, இதையிட்டு நாங்கள் கவலை கொண்டுள்ளோம், கைது செய்யப்பட்டவர்களுள் பாதுகாப்பை நாடுபவர்கள் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் தங்கள் வேண்டுகோளை அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் இருக்கலாம்.”
”Operation Xenios Zeus” என்று அழைக்கப்படும் இந்த பரந்த நாடுகடத்தல் நடவடிக்கை, குடியேறுபவர்களுக்கு எதிரான பரந்த நடவடிக்கையின் ஒரு பாகமாகும். ஏப்ரல் மாதத்தில் இருந்து கைதுக்கள், நாடுகடத்தல்கள் ஆகியவற்றிற்கு வகை செய்யும் இடைவிட வெகுஜனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் மட்டும் 819 பேர் கிரேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.