Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிரிக்கெட் வீரர்களை கடத்தி தாக்குதலை நிறுத்த புலிகள் முயற்சித்திருக்கலாம்! : பாக். சம்பவம் குறித்து பாலித கோஹன கருத்து.

05.03.2009.

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.விடுதலைப் புலிகள், பாகிஸ்தானில் எமது கிரிக்கெட் வீரர்களைப் பணயக் கைதிகளாக வைத்து, வடக்கில் மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை நிறுத்த முயற்சித்திருக்கலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீதான தாக்குதலுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லை என உறுதியாக கூற முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

இலங்கை கிரிக்கட் வீரர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகியமை தொடர்பிலான விசாரணைகள் அந்நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பல விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.

விடுதலை புலிகள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டிருக்கலாம் என பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிரிக்கட் வீரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் பயன்படுத்தியுள்ள ஆயுதங்கள் அவர்களின் திட்டமிடல்கள் என்பன விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை ஒத்ததாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விடுதலை புலிகள் பாகிஸ்தானில் எமது கிரிக்கட் வீரர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்து இலங்கை அரசாங்கத்தால் வடக்கில் மேற்கொள்ளப்படும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழுத்தம் தெரிவிப்பதற்காக இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டிக்கலாம்.

இந்த தாக்குதல் நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் லஷ்கர் அல் தொய்பா அமைப்புக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் புலனாய்வு தொடர்புகள் இருக்கின்றன என்பதை நாம் வரலாற்றில் கண்டுள்ளோம். எனவே இவை அனைத்து விடயங்களை வைத்து பார்க்கும்போது பாகிஸ்தான் சம்பவத்துடன் விடுதலை புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

லஷ்கர் அல் தொய்பா அமைப்பின் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளுடன் விடுதலை புலிகளுக்கு தொடர்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

 

 

Exit mobile version