Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிராம உத்தியோகத்தர்களின் அசமந்த போக்கும் மலையக வயோதிபர்களுக்கு கிடைக்காமல் போன 1000 ரூபா மாதாந்த உதவித்தொகையும்: சை.கிங்ஸ்லி கோமஸ்

இலங்கை நாட்டின் வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு அங்கமாக சமுர்தி உதவியும் முதியோர்களுக்கான 100 ரூபா மாதாந்த உதவித் தொகை வழங்கலும் பல வருடகாலமாக வழங்கப் பட்ட வந்தமை நாம் அறிந்த விடயமாகும். இதில் சமுர்தி உதவி என்பது சில வரையறைகளுக்குள் செய்யப்பட்டு வந்ததுடன் ஜனசவிய திட்டத்தின் மறுவடிவமாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதிலும் சமுர்தி உதவியானது கட்டாயமாக கிடைக்க வேண்டியவர்களுக்கு வழங்கப் படுகின்றதா? என்று நோக்கும் போது அது விமர்சனத்திற்குரிய விடயமாகும்.ஆனாலும் முதியோர்களுக்கு வழங்கப் பட்ட 100 ரூபாய் உதவித் தொகை ‘பிங் படி’எந்த வித வரையறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிராம உத்தியோகத்தர்களின் தற் துணிவில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 மகிந்த ராஜ பக்சவின் தேர்தல் முன்மொழிவான ‘மகிந்த சிந்தனையில்’ குறிப்பிட்ட வறுமை ஒழிப்பு செயற்திட்டத்தின் முதியோருக்கான ஓய்வூதிய திட்டம் 2011 ஆம் ஆண்டு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப் பட்டதற்கு அமைய குறைந்த வருமானம் பெரும் 65 வயதிற்கு அதிகமானவர்களுக்கு வழங்குவதற்கு பாராளுமன்ற அங்கிகாரம் வழங்கப்பட்டது.இதற்காக முதியோர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற நிலைமையினை ஆய்வுசெய்ததன் பின் சமுர்தி உதவி பெரும் குடும்பங்களும் 100 ரூபாய் பிங் படி என்று அழைக்கப் பட்ட உதவி தொகை பெற்றவர்களுக்கும் வழங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது.

சமுர்தி உதவித் தொகை வழங்குவதற்கு சமுர்தி உத்தியோகத்தர்களும் நியமிக்கப் பட்டிருப்பதுடன் 100 ரூபாய் உதவித் தொகை வழங்குவது தொடர்பான கடமை கிராம உத்தியோகத்தர்களின் கடமைப் பட்டியலில் கட்டாய கடமையாக குறிப்பிடப் பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப் பட வேண்டிய விடயமாகும்.

நுவரெலியா அரசாங்க அதிபர் பிரிவில் மொத்த சனத் தொகை 703610 பேராகும் இதில் இந்தியத் தமிழர்கள் 355830 பேர் இவர்களில் 1050 பேர் மாத்திரமே 1000 ரூபா உதவித் தொகை பெறுவதற்கு தகுதிப் பெற்றவர்கள். இந்த நிலைமையினை அவதானிக்கும் போது இலங்கைத் திரு நாட்டின் வசதியானவர்கள் அதிகமாக வாழும் பிரதேசம் நுவரெலியா மாவட்டம் என்று அடையாளப் படுகின்றது.உதாரணமாக அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவினை நோக்குவோமாயின் மொத்த சனத் தொகை 203717 பேராகும் இவர்களில் 1000 ரூபா உதவித் தொகை பெறுவதற்கு தகுதிப் பெற்றவர்கள் 580 பேர் இதில் மலையகத் தமிழர்கள் 142062 பேர் இவர்களில் 1000 ரூபா உதவித் தொகை பெறுவதற்கு தகுதிப் பெற்றவர்கள் 180 பேர்.

இலங்கையின் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு அம்ப கமுவ பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பொகவந்தலாவை லெச்சுமித் தோட்டம் ஆகும்(முநுசுமுநுசுளுழுடுனு நுளுவுயுவுநு) தோட்டம் இங்கு மக்கள் தொகை 17000 பேர் 5000 குடும்பங்கள் 13 டிவிசன் இந்த தோட்டத்தில் 1000 ரூபா உதவித் தொகை பெறுவதற்கு தகுதிப் பெற்றவர்கள் யாரும் இல்லை என்பது ஆச்சரியமான விடயமாகும் இந்தத் தோட்டத்தில் 65 வயதிற்கு அதிகமானவர்கள் யாரும் இல்லையா? அல்லது அனைவரும் அரசாங்க உத்தியோகம் செய்து ஓய்வூதியம் பெறுபவர்களா? அல்லது கோடீஸ்வரர்களா?

மேலே கூறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மலையக மக்களுக்கு அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என்று விமர்சனங்களை வைப்பதுடன் மலையகத்தில் இருந்து கல்வி கற்று அரசாங்க பதவிகளுக்கு வந்திருக்கும் அதிகாரிகள் தொடர்பாக கடுமையான விமர்சனத்தினை வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இதிலும் மலையக ஏழை முதியவர்களுக்கு கிடைக்கக் கூடிய அற்ப உதவியைக் கூட செய்யாமல் தட்டிக் கழிக்கும் கிராம உத்தியோகத்தர்கள் அதிக அக்கறையுடன் தங்களின் கடமையை செய்ய வேண்டியது கட்டாயமாகும். முழு மலையகத்தையும் நோக்கும் போது மலையகத் தோட்டத் தொழிலாளர்களில் முதியவர்கள் அவர்களின் நுPகு நுவுகு என்பவற்றை பிள்ளைகளுக்கு தாரை வார்த்து விட்டு வாழ வழி இல்லாமல் வீதிக்கு வந்தவர்கள் தொகையை நோக்கும் போது இவர் போன்றவர்க்கே சமுர்தி உதவியும் மற்றய அரசாங்கத்தின் மானியங்களும் உதவித் தொகைகளும் வழங்கப் பட வேண்டியது கட்டாயம் அல்லவா? மலையகத்தில் யாசகத்திற்காய் வீதிகளில் இருக்கும் முதியோர்களை நோக்கும் பொழுது கிராம உத்தியோகத்தர்களின் கடமை எந்த அளவிற்கு நேர்த்தியாக செய்துள்ளார்கள் என்று மதிப்பிடலாம். மலையகத்தில் நியமிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள் 100 ரூபாய் வயோதிபர்களுக்கான கொடுப்பனவை கடந்த காலங்களில் கொடுக்கத் தவறியதுவே 1000 ரூபா உதவித் தொகை கிடைக்காமல் போனதற்கு நிச்சயமான காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இது தொடர்பான பொது அறிவித்தல்களைக் கூட முறையாக செய்யாத மலையக தமிழ் கிராம சேவகர்கள் முறையான விசாரனைக்குட்படுத்தப் படவேண்டும் என்பது பொது மக்கள் கருத்தாகும்.

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 100வீதமான முதியோர்கள் நகர் புறங்களில் வாழும் வர்த்தக சமுகத்தினைச் சேர்ந்த முதியோர்கள் கூட இந்த 1000 ரூபா உதவித் தொகையை பெறும் போது மலையக ஏழைத் தொழிலாளர்களுக்கு இது கூட எட்டாக் கனியாகி விட்டது.இது மாத்திரம் அன்றி கர்ப்பிணித் தாய் மாருக்க வழங்கும் போசாக்குணவு பொதியை கேட்டுச் சென்ற பல மலையகப் பெண்கள் மலையகத் தமிழ் கிராம உத்தியோகத்தினர்களால் துரத்தியடிக்கப் பட்ட சமபவங்களும் ஏழைகளுக்கு வழங்கும் சிறு சிறு சலுகைகளுக்காக கூட கையூட்டல் பெற்றுக் கொள்ளும் கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக மலையக தமிழ் மக்கள் தங்களின் அதிருப்தியினை தெரிவித்து வருகின்றனர்.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத இது போன்ற துரதிஸ்ட சாலிகளான மலையக மக்களின் துயர் போக்க மலையகத்தைப் பிரதி நிதித்துவப் படுத்தும் அரசியல் வாதிகள் சற்று தங்களின் கடைக் கண் பார்வையை திருப்புவார்களாயின் மலையக தமிழ் கிராம சேவகர்கள் தங்களின் கடமையை சரியாக செய்ய தூண்டப் படுவார்கள். ஏனெனில் இந்த கிராம சேவககர்கள் அனைவரும் மலையக அரசியல் வாதிகளின் சிபாரிசு கடிதங்கள் மூலம் பதவிகளைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பொது மக்களும் தங்களுக்கு அநீதி இழைக்கப் படும் போது அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்காமலும் போராடாமலும் இருக்கும் வரை இது போன்ற சலுகைகளும் உரிமைகளும் மலையக மக்களக்ககானல் நீராக மாத்திரமே இருக்கும் என்பது திண்ணம்.

Exit mobile version