உலக வரலாற்றில் ஒரு குட்டி நாட்டிற்கு எதிராக இத்தனை பெரிய தடையை அமெரிக்கா அறிவித்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க தடைகளையும் மீறி வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருக்கிறது கியூபா.
கியூபாவில் 1959-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சிகர அரசு அமைந்தது.அமெரிக்கா இதைக் கண்டு அச்சமடைந்த நிலையில் 1960 முதல் கியூபா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்தது. புகையிலை, சர்க்கரை ஏற்றுமதி என ஆரம்பத்தில் மிகப்பெரிய சிரமங்களைச் சந்தித்த க்யூபா வியக்கத்தக்க அளவில் தன் நாட்டு மக்களை சுயசார்பு பொருளாதாராத்தினால் உயர்த்தியது.
கல்வி, மருத்துவம், ரேஷன் சிஸ்டம் என வளர்ச்சியடைந்த நாடுகளே வியக்கும் வகையில் கியூப மக்களை தன்னிறைவு பெற்ற மக்களாக இந்த 60 ஆண்டுகளில் வளர்த்தெடுத்தது. ஆனால், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாக அமெரிக்கா க்யூபா மீது தொடர்ந்து பிரச்சாரம் செய்து பொருளாதார தடைகளை விதித்து வந்தது. அமெரிக்க அதிபராக ஓபாமா இருந்த போது க்யூபா மீதான இறுக்கமான நடவடிக்கைகளைத் தளர்தினார். மூன்று நாள் பயணமாக 2016-ஆம் ஆண்டு க்யூபா வந்த ஓபாமா ராவுல் காஸ்ட்ரோவையும் சந்தித்து பேசினார்.
ஓபாமாவின் இந்த வருகைக்குப் பின்னர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து க்யூபாவை நீக்கினார் ஓபாமா. ஆனால், டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் க்யூபாவிடம் சுதந்திர தனியார் வர்த்த நலன்களை அமெரிக்காவோடு க்யூபா செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், க்யூபா தனது பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளவில்லை.
இப்போது டிரம்பின் பதவிக்காலம் முடியவிருக்கும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ க்யூபாவை பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்திருக்கிறார். இன்னும் சில நாட்களில் பதவியை விட்டு டொனால்ட் டிரம்ப் செல்ல இருக்கும் நிலையில், க்யூபா மீதான அமெரிக்காவின் தடையை க்யூபா கண்டு கொள்ளவில்லை. காரணம் கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் தடையை மீறி க்யூபா வளர்ந்து வந்துள்ளது.