Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்கு எதிரான கலவரங்கள்.

2009 மே மாதத்தில் காஷ்மீரின் ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். சென்றவர்கள் திரும்பிவரவேயில்லை. மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃபரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் நீலோ ஃபர்ஜானும், ஆஸியா ஜானும் பிணமாகக் கிடந்தார்கள். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த நீலோஃபர், மாணவியான ஆஸியாவின் மரணங்கள் பள்ளத்தாக்கில் நெருப்பை மீண்டும் கொண்டு வந்தன. நீண்டகால சுயாட்சிப் போராட்டத்தில் மக்கள் அணிதிரண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் சமீபத்திய நிகழ்வாக நடந்தக் கொலைகள்தான் இவைகள். இரண்டு காஷ்மீர் இளம் பெண்களும் இந்திய இராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது காஷ்மீரிகளின் குற்றச்சாட்டு. இந்திய இராணுவவோ இந்திய அதிகார மேல்கட்டுமான அதிகார பீடங்களோ இதை தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள் என்றது.

அப்போது எரியத் துவங்கிய நெருப்புதான் ஓராண்டுகள் ஆகியும் தணியவில்லை. ஷோபியான் மாவட்டத்தில் எழுந்த கிளர்ச்சி இன்று காஷ்மீர் முழுக்க மக்கள் எதிர்ப்பியக்கமாக வலுப்பெற்றிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒரு முறை காஷ்மீரில் படை நடவடிக்கைகள் மக்களுக்கு எதிரானதல்ல தீவீரவாதிகளுக்கு எதிரானது மட்டும்தான் என்றார். ஆனால் இந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பள்ளத்தாக்கில் கொல்லபப்ட்டு விட்டார்கள். ஒரு தீவீரவாதியைத் தேடுவதைக் காட்டிலும் ஒரு காஷ்மீரியைக் கொன்று விட்டு தீவீரவாதி என்று சொல்லி விடுவது எளிது. அந்த எளிய காரியத்தைத்தான் இந்தியா காஷ்மீரில் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 15 பேர் வரை காஷ்மீரில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த திங்களன்று பாதுகாப்புப் படையினரின் செயல்களைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தினர். அப்போது பேரணி சென்றவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கற்களை வீசித் தாக்கினர். பட்டமலூ என்ற பகுதியில் நிகழ்ந்த சம்பவத்தில் தங்களைக் காத்துக் கொள்ள பாதுகாப்புப்படையினர் பொதுமக்களை கலைக்க முற்பட்டனர். அப்போது ஓடிச் சென்ற பொதுமக்களில் ஒரு இளைஞர் கழிவுநீர் சாக்கடையில் விழுந்து இறந்தார். (இப்படித்தான் இந்திய இராணுவம் சொல்கிறது) கொல்லப்படுகிற எவரையுமே தாங்கள் சுட்டுக் கொன்றதாக ஒரு போதும் இந்திய இராணுவம் சொன்னதில்லை. 17 வயது இளைஞன் கொல்லப்பட்டதும் பொதுமக்களின் கோபம் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மேலும் அதிகரித்தது. திங்கள் இரவு முழுவதும் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த முகாம்களில் கற்களை வீசித் தாக்கினர். உயிரிழந்த முஸôபர் அகமது என்ற இளைஞரின் சாவுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கோரி செவ்வாய்க்கிழமை காலையில் பேரணி புறப்பட்டனர். அப்போது மீண்டும் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பாதுகாப்புப் படையினரை நான்கு புறத்திலிருந்தும் பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள முதலில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். பின்னர் நிலைமை அத்துமீறி செல்வதை உணர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஃபயஸ் அகமது என்பவர் உயிரிழந்தார். இவர் இங்குள்ள காங்பக் பகுதியைச் சேர்ந்தவர் என்று போலீஸôர் தெரிவித்தனர். இந்நிலையில் கலவரங்களை வேடிக்கை பார்த்த பெண் ஒருவரையும் இராணுவத்தினர் சுட்டுக் கொல்ல இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எதிரான கலவரம் காஷ்மீர் முழுக்க பரவியுள்ளது. காஷ்மீர் முதல்வர் உடனடியாக இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலதிகப் படைகளை காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது இந்தியா.

Exit mobile version