Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் பிரச்சனையை விவாதிக்க வேண்டும்- பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாதவரையில் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.​ கிருஷ்ணாவுடன் பேச்சு நடத்தி ஒரு நாள் கூட ஆகாத நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார் குரேஷி. இந்தியா முக்கியமாகக் கருதும் விஷயங்களை மட்டும்தான் விவாதிக்கவேண்டும் என்று விரும்புகிறது.​ ஆனால் பாகிஸ்தான் முக்கியமாகக் கருதும் பிரச்னையைக் கண்டு கொள்ளவே தயாராக இல்லை என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குரேஷி இத்தகவலைத் தெரிவித்தார். காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது.​ அப்பகுதியானது பிரச்னைக்குரிய பகுதியாகும்.​ காஷ்மீர் பிரச்னையைத் தவிர்த்து பேச்சு நடத்துவது சாத்தியமில்லாதது.​ மேலும் சியாசின் பகுதியில் பாதுகாப்பு விஷயம் குறித்தும் பேசாமல் அமைதியை ஏற்படுத்துவது என்பது கடினமான விஷயம். இந்தியாவின் பிரச்னையைப் புரிந்து கொண்டு அதைத் தீர்க்க தயாராக உள்ளோம்.​ அதேபோல பாகிஸ்தானுக்கும் சில பிரச்னைகள் உள்ளன என்பதை இந்தியா உணர வேண்டும்.​ அதைத் தீர்க்க இந்தியா முன்வர வேண்டும்.​ இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாகக் கூற முடியாது.​ ஆனால் பேச்சுவார்த்தையில் சிரமம் இருந்தது.​ இதை இரு நாடுகளும் சேர்ந்துதான் தீர்க்க வேண்டும். இந்தியாபாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை எப்போதெல்லாம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் கடைசி நேர உரசல் ஏற்படுவது வழக்கம்.​ ஆனால் இம்முறை பாகிஸ்தான் தரப்பில் எவ்வித உரசலும் ஏற்படவில்லை.​ அனைத்து விஷயம் குறித்தும் பேசத் தயாராக இருப்பதாக கிருஷ்ணா கூறினார்.​ ஆனால் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து தெளிவான விவரத்தை குறிப்பிடவில்லை.​ ​இந்தியா மிகவும் குறுகிய கண்ணோட்டத்துடன் அணுகுகிறது.​ குறிப்பிட்ட விஷயம்தான் பேச வேண்டும் என வரையறுக்கக் கூடாது என பாகிஸ்தான் சுட்டிக் காட்டியது.​ எந்தெந்த விஷயங்கள் குறித்து பேச வேண்டும் என ஏற்கெனவே இரு நாடுகளும் வரையறுத்திருந்தன.​ இவை 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன.​ நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட இந்த வரையறையை ஒருங்கிணைந்த பேச்சு எனக்கூறி மீண்டும் தொடங்கினால் அது மிகவும் கடினமானதாக இருக்கும். அடிக்கடி போன் பேசினார் கிருஷ்ணா:​​ நாள் முழுவதும் பேச்சு நடந்தாலும்,​​ வெளியுறவு கொள்கை குறித்து அடிக்கடி தில்லியுடன் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார் கிருஷ்ணா.​ தில்லி வரையறுத்த கொள்கையை அவர் இங்கு தெரிவித்தார்.​ ஆனால் அவருடன் பேச்சு நடந்தபோது ஒரு முறை கூட பாகிஸ்தான் தலைவர்களுக்கு நான் போன் மூலம் தெரிவிக்கவில்லை.​ எத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கேட்கவில்லை என்றும் குரேஷி கூறினார்.​ பூடானில் கடந்த ஏப்ரலில் இரு நாடுகளின் பிரதமர்களும் சந்தித்து பேசியபோது எந்தெந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம் என வரையறுத்திருந்தனர்.​ ஆனாலும் பேச்சுவார்த்தையின் இடையே அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றார் கிருஷ்ணா. பேச்சுவார்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.​ இந்தியா முன்வைக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துவிட்டு,​​ பாகிஸ்தான் பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளினால் அது ஆரோக்கியமான பேச்சுவார்த்தையாக அமையாது.​ இதனால் முன்னேற்றமும் ஏற்படாது.​ ​ காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது பழைய நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.​ பாகிஸ்தான் மக்களும்,​​ காஷ்மீர் மக்களையும் தனித்தனியாக பிரித்து பிரச்னையை பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version