Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் தொடர்கிறது போராட்டம்.

காஷ்மீரில் நிலமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்க இந்திய அரசோ மேலதிகப் படைகளை காஷ்மீருக்குள் இறக்கி வருகிறது. கலவரங்களில் இதுவரை சுமார் 45-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ‘’காஷ்மீரில் அமைதி திரும்புவதற்காக மாநில அரசு அரசியல் ரீதியிலும் நிர்வாக ரிதீயிலும் பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் அளித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சி திட்டங்களை முடுக்கிவிடுவதோடு காஷ்மீர் மக்களுக்கு சம உரிமையும் நீதியும் காக்கப்படும் என்றார் அவர். காஷ்மீர் மக்களது பிரச்னை தனது மக்களின் பிரச்னை என்பதை அரசு நன்கே உணர்ந்துள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்துவதில் கவனம் கொள்ளுங்கள், ஆனால் வன்முறை போராட்டக்களில் இருந்து விலகி இருங்கள் என்று காஷ்மீர் மக்களை அவர் கேட்டுக்கொண்டார். தான்தோன்றிதனமான வன்முறை செயல்களும் பொதுச் சொத்துகளை அழிப்பதும் எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வாக அமைந்துவிடாது. அதற்குப் பதிலாக விலைமதிப்பில்லா மனித உயிர்களை பலி கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. அரசியல் ரீதியில் தீர்வுகாண எந்த முயற்சி எடுப்பதானாலும் அங்கு அமைதி திரும்பிய பிறகே செய்யப்படும்.சில பிரிவினைவாதிகள் ஆயுதங்களுடன் அப்பாவி மக்களுடன் கலந்து பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டுள்ளனர். தற்பாதுகாப்பாக படையினர் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கும் போது நிதானமாகவும் கட்டுப்பாடுடனும் செயல்படுமாறு படையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு அரசியல் ரீதியிலேயே தீர்க்க முடியும் என்பதில் அரசு முழு நம்பிக்கை கொண்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருந்த பாசல் உல் ஹக் குரேஷி கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகான நடவடிக்கைகள் முடங்கிப் போயின. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க அரசு தயாராக உள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்ப எல்லா நடவடிக்கைகளும் எடுப்பதாக மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா பிரதமர் மன்மோகனிடம் உறுதியளித்துள்ளார். வன்முறை கலவரத்தில் பல உயிர்கள் பலியாகி இருப்பது குறித்து மத்திய அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் பலர் இறந்துள்ளனர். உங்கள் குழந்தைகள் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிவினைவாதிகளின் தவறான வழிகாட்டுதலில் இளைஞர்கள் பாதை மாறி செல்லும் ஆபத்து உள்ளது என்று அவர் எச்சரித்தார். பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசும்போது, காஷ்மீர் நிலவரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். விவாதம் நடத்தினால்தான் அங்கு அமைதி நிலவ அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர். காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Exit mobile version