Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல- பாகிஸ்தான்.

காஷ்மீர் மக்களின் நீண்டகால சுயாட்சிக் கோரிக்கையை இந்தியாவும் பாகிஸ்தான் என இரு நாடுகளுமே அங்கீகரித்ததில்லை. காஷ்மீர் இந்தியாவாலும் பாகிஸ்தான் அரசாலும் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களோ இந்த இரண்டு ஆக்ரமிப்பு இராணுவத்திடம் இருந்தும் தங்களுக்கு தங்களை விடுவித்து சுயாட்டிப் பிரதேசமாக காஷ்மீரை அறிவிக்கக் கோருகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீர் மக்களின் விடுதலை உணர்வை அங்கீகரிக்க மறுக்கிற இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீருக்கு சொந்தம் கொண்டாடுகின்றன. இந்நிலையில் காஷ்மீர் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் வியாழக்கிழமை கூறியதாவது: காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்வதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் பாகிஸ்தான் ஈடுபடாது. காஷ்மீர் பிரச்னையில் இந்தியா தனது நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஜம்முகாஷ்மீரில் பிரச்னையில் எந்தவித தீர்வும் ஏற்படாது.எனவே காஷ்மீர் பிரச்னையில் புதிய கொள்கையை இந்தியா உருவாக்கவேண்டும். காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக என்பதை இந்தியா நிறுத்தவேண்டும். மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இப்பிரச்னையை அணுகுவோம் என்ற வாதத்தையும் இந்தியா நிறுத்தவேண்டும். காஷ்மீரில் நடந்துவரும் கலவரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழுவினர் சென்றதை ஹுரியத் மாநாட்டுக் கட்சியினர் ஏற்கவில்லை. ஜம்முகாஷ்மீர் பிரச்னை, சர்வதேச பிரச்னையாகும். ஜம்முகாஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தை ஒடுக்க இந்திய பாதுகாப்புப் படையினர் எடுத்து வரும் முயற்சிகள் பலனற்றவை. இந்திய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைள் மனித உரிமையை மீறுவதாக உள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் கலவரம் நிறுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கிமூன் கேட்டுக் கொண்டுள்ளார். அதைப் போலவே கலவரத்தை நிறுத்திவிட்டு, காஷ்மீர் மக்களின் உரிமையைப் பாதுக்கவேண்டுமென்று இஸ்லாமிய மாநாட்டு அமைப்பும், அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.ஜம்முகாஷ்மீர் பிரச்னையில் அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என்று பாகிஸ்தான் உறுதி பூண்டுள்ளது. காஷ்மீரில் வாழும் மக்களுக்கு அரசியல், அதிகார ஆதரவை பாகிஸ்தான் என்றும் வழங்கும். காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக எந்த பிரசாரத்தையும் பாகிஸ்தான் செய்யவில்லை. குரேஷிகிருஷ்ணா சந்திப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நியூயார்க்கில் சந்தித்துப் பேசுவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

Exit mobile version