கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடத்தல், பாலியல் வன்முறை, கொலைகளால், எல்லா காஷ்மீரிகளுமே வீதிக்கு வந்து இந்தியாவுக்கு எதிராக போராடி வந்தனர். கடந்த பல மாதங்களாக முடங்குக் கிடக்கும் காஷ்மீருக்கு மேலதிகமாக இராணுவத்தை அனுப்பினார் சிதம்பரம். ஆனாலும் மேலும் மேலும் அங்கு போராட்டங்கள் வலுத்து வருகிறதே தவிற நின்றபாடில்லை. அன்றாடம் மக்கள் கொலைகளை தொடர்கிற இந்திய இராணுவத்திற்கு எதிராக தீவீரமடையும் காஷ்மீரிகளின் போராட்டத்தில் உண்மையை மறைத்து தனது போலி மனிதாபிமானப் பற்றை வெளிப்படுத்தியிருக்கிறார் பான்கிமூன். இது குறித்து ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீரில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சண்டைகளால் அங்குள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். கடையடைப்பு, ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இப்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது பெரும் நிம்மதி அளிக்கிறது. இந்நிலையில், பிரச்னையில் சம்பந்தப்பட்ட காஷ்மீர் மாநில தலைவர்கள் நிதானத்துடன் செயல்பட்டு அங்கு அமைதி நிலவ உதவ வேண்டும். இந்தியா– பாகிஸ்தானுக்கிடையே காஷ்மீர் பிரச்னைதான் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. இவ்விஷயத்தில் இரு நாடுகளின் ஆட்சியாளர்களும் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டு சுமூக உடன்பாடு எட்ட முனைப்புடன் செயல்பட வேண்டும். இரு நாடுகளின் அமைதி பேச்சுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ள தடைகளை நீக்கிட, இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தீர்வு காண வேண்டும்.காஷ்மீர், பயங்கரவாதம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளில் இரு நாடுகளும் பொறுமை, விடாமுயற்சி மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட்டு தீர்வு காண வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற இந்திய, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களிடையேயான சந்திப்பு, அமைதி பேச்சு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இது போன்ற அமைதி பேச்சுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆசிய பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரமான வளர்ச்சியும் நிலவுவதற்கு இவ்விரு நாடுகளுக்கிடையே அமைதியான சூழல் நிலவுவது அவசியம். அதை உணர்ந்து இரு நாடுகளும் தங்களுக்கிடையேயுள்ள வேற்றுமைகளைக் களைந்து, அமைதி பேச்சுகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பான் கி மூன்.