Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காலப்பெருந்தகைக்கு…: அ.ஈழம் சேகுவேரா

1என் நெஞ்சறைக்கூட்டுக்குள் அப்பழுக்கில்லாமல் அப்படியே அப்பிப்போய்க்கிடக்கிற உங்கள் பற்றிய எண்ணங்கள், புரிதல்கள் அவ்வப்போது என் நினைவுகளில் வந்து, முட்டி மோதுகின்றபோது உயிர் வலிக்கும் ரீச்சர். அது மிகப்பெரிய ரணகளம்! கண்ணீரில் கரைந்து கசிந்து உருகிப்போகும் மனசு. “ஜெயராணி ரீச்சர்” எப்படி ரீச்சர், உங்களால் மட்டும் முடிகிறது என் நினைவுகளில் முடிந்தவரை பயணிக்க?

பல கதைகள் உங்களோடு பேச வேண்டும். அத்தனையும் பவ்வியமாக மனசுக்குள் பொத்திப்பொத்தி வைத்திருக்கிறேன். ஒவ்வொரு பொழுதும் புலரும் – இன்றாவது உங்கள் குரல் நிச்சயம் என் காதுகளில் வந்து பாயும், மறுபடியும் உங்கள் தொடர்பு கிடைத்துவிடும் என்ற தேடலோடு. ஆனால் எதுவும் கைகூடவில்லை என்றானபோது அன்றைய பொழுதும் செத்து மடிந்துபோயிருக்கும். ஆயினும் மறுநாளும் தேடல் தொடங்கிவிடும் – இன்னும் புதிய தெம்போடு.

ஒரு குவளை தேநீருடன் பொங்கிப்பிரவாகிக்கின்ற மட்டற்ற மகிழ்ச்சியோடு, மாசுமருவற்ற உங்கள் உள்ளம் பற்றி, உறவு பற்றி கொட்டிச்சிதறுகின்றேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் கருகமணிகளை, பவளமணிகளை உயிர்ப்பாக கோர்த்து குருதட்சணையாக அளிக்கை செய்கிறேன். எடுத்துக்கொள்ளுங்கள் ரீச்சர்.

“அன்பு, பாசம், மகிழ்ச்சி, பரிவு, நம்பிக்கை” மனித வாழ்வியலின் இந்த அழகிய உணர்வுகளை எனக்குள் புகுத்திய பெருந்தகையே! எப்படிப்பாடுவேன். எதிலேற்றிப்பாடுவேன். உங்களுக்கும் எனக்குமான உறவு பற்றி? அது பூவோடும் நாரோடும் விரல்கள் உறவு வைத்துக்கொள்வதைப்போன்றதல்லவா!

எனக்கு சுத்தமாக நினைவிருக்கிறது ரீச்சர், அந்த வளர் இளம்பராய பள்ளிக்காலம். “புனிதபூமி” சிறுவர் இல்லத்திலிருந்து ஏர் பிடித்ததுபோல ஓர் நிரலாக கால் நடையாகவே நாம் முல்லை/முத்துஐயன்கட்டு வலதுகரை அ.த.க.பாடசாலை நுழைவாயிலை வந்தடைவோம். அப்போதே இனம் புரியாக்கலவரம் எனைத்தொற்றிக்கொள்ளும். வந்ததும் வராததுமாய் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து என் கண்கள் முதலில் உங்கள் வரவை உறுதிப்படுத்திக்கொள்ளும்.

முதல் மணி ஒலித்து ஓய்ந்ததும் மிகவும் பரபரப்பாக சுழல ஆரம்பிக்கும் அன்றைய காலைப்பொழுதுகளில் அத்தனை கூட்டத்திலிருந்தும் தனியாக உங்கள் முகம் சட்டென்று பளிச்சிடும். அந்த நிமிசமே, எனக்கு “நதி ஒன்று கடலில் சங்கமித்த மனநிறைவு” கிடைத்துவிடும். நெருங்கி வந்து பரஸ்பரம் “காலை வணக்கம்” சொன்னதும் மனசுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்கும். ஆயிரம் மின்மினிகள் மின்னி மறையும்.

முதல் நிலை மாணவனிலிருந்து கடைநிலை மாணவன் வரை நீங்கள் காட்டும் அப்படியொரு கவனிப்பு – அக்கறை. கற்பித்தலில் நீங்கள் காட்டும் அவ்வளவு ஈடுபாடு – அர்ப்பணிப்பு. கொள்ளை அழகு. அப்படியே முற்றத்து துளசி போலத்தூய்மையே! ஜெயராணி ரீச்சர் என்றால், கட்டளைகள் ஒழுங்கமையும். காரியங்கள் சீரமையும். கண்டிப்பு காரமாய் இருக்கும். கருத்தூட்டல் கணிசமாய், கனிவாய் இருக்கும். நாம் இடறுகின்றபோதெல்லாம் முட்டுக்கொடுத்து எமைத்தாங்கிப்பிடித்த உங்கள் பக்குவம் இருக்கிறதே, அது “நாம் குலை போட்ட வாழைகள்” என்பதை, நெடுநாளும் நமக்குள் உணர்த்திக்கொண்டேயிருக்கும்.

ஆதலால் மிகச்சாலப்பொருத்தமாக “காலப்பெருந்தகைக்கு” எனச்சுட்டியிருக்கிறேன். இம்மியளவும் பிசகாமல் அச்சொட்டாக பொருந்தி வருகிறீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்களையே எமது வகுப்பாசிரியராக பெற்றது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி ரீச்சர். காலம் செய்திகளை தன் குழந்தையாக தூக்கிச்செல்வதுபோல தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரை கூடவே எமைச்சுமந்து வந்தீர்கள். இன்று அதுவே வாழ்வின் எல்லாக்கால கட்டங்களுக்கும் எடுத்துச்செல்லும் புனிதமான உறவாக மாறிப்போனதையிட்டு எனக்குள் மிகப்பெரிய நிமிர்வு. அளவில்லா கர்வம்.

எங்கள் ஐந்தாம் தர வகுப்பறையிலேயே கற்றலில் முதலிடம் எனது அருமை நண்பன் ராஜ்குமார். இதை நான் மனதார ஒப்புவிக்கின்றேன். எப்போதும்போலவே எனக்கு இரண்டாம் இடம்தான். இது எங்கள் பாடசாலை சமூகத்துக்கே அப்பட்டமாக தெரிந்த உண்மை. இருந்தும் அன்றைக்கு புலமை பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய நாற்பத்தைந்து முதல் ஐம்பது வரையான மாணவர்களில் நான் மட்டும்தான் சித்தியடைய முடிந்தது.

எங்கள் வகுப்பறைக்கு முன்னே ஒரு தேமா மரம். அதன்கூடவே நீண்டு செல்லும் ஓர் பாதுகாப்பகழி. பெறுபேறுகளை பரஞ்சோதி அதிபர் அறிவித்ததும், பாதுகாப்பகழியையும் தாண்டி ஓடி வந்து எனை வாரி அள்ளி இறுகப்பற்றி அணைத்துக்கொண்டே… “ஓய்வு வேளை ஒன்றில் பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் அமர்ந்து தரம் ஐந்து மாணவர்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, எல்லா ஆசிரியர்களும் ராஜ்குமார்தான் சித்தியடைவான் என்று எதிர்வு கூறினார்கள்.

அதை நான் மறுதளித்து இல்லை இல்லை “சே” குட்டி தான் சித்தியடைவான் என்று சவால் விட்டுப்பந்தயம் கட்டியிருந்தேன். நான் ஜெயிச்சிட்டன். என்ர மானத்தை காப்பாத்திட்டாய்.” என்று நீங்கள் சொல்லி அழும்போது, விவரம் அறியா அந்த வயசில அன்றைக்கு எனக்கு பகுத்தறிந்து பேசும் தன்மையோ, மொழிப்புலமையோ அவ்வளவாக இருக்கவில்லை ரீச்சர். ஆனால் இன்றைக்கு சொல்கிறேன். “நீங்கள் இருக்க பயமேன்” என்கிற அசாத்திய துணிச்சல் மட்டும்தான் அன்றைக்கு என்னுள் மீதமாய், மிச்சமாய் இருந்திருக்கும் ரீச்சர்.

ஆனாலும் எனை நானே அவ்வப்போது சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்திக்கொள்ளும்போது எனக்குள் பலமுறை எழும் கேள்வி, “வகுப்பறையிலேயே தொடர்ச்சியாக இரண்டாம் இடம் வந்துகொண்டிருக்கும் என்னில் எதை வைத்து ரீச்சர் பந்தயம் கட்டி ஜெயித்திருப்பா?” இன்றும்கூட எனக்கு இது புரியாத புதிர் ரீச்சர்.

உத்தியோகம் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பின்னும் நாளும் பள்ளிக்குப்போகிறோம் நினைவுகளில். அந்த இத்தி மரம், விளையாட்டுத்திடல், வகுப்பறைக்கூடம், முற்றம், கிணற்றுச்சூழல் எல்லாமே எல்லாமே, அப்படியே நெஞ்சில் நிலைச்சிருக்கு! நிறைஞ்சிருக்கு! “சே குட்டி” “சே குட்டி” அசடு வழிய நீங்கள் கூப்பிடும் அந்த கனிவுக்குரல் இப்போதும் என் செவிப்பறைகளுக்குள் நுழைந்து கணீரென ஒலித்து இன்னும் பல நினைவுகளை தட்டி எழுப்புகின்றது ரீச்சர். இப்போதும்கூட குட்டி போட்ட பூனையாக என் மனசு அந்த ஐந்தாம் தர வகுப்பறையை சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறது ரீச்சர்.

ஏதோவொன்றை இழந்து விட்டதான உணர்வு எனை கௌவ்விக்கொள்கிறது. இனம் புரியா சோகம் என்னுள் எங்கும் பரவிக்கிடக்கிறது. “எமக்குள் நீங்களும் உங்களுக்குள் நாங்களுமாக கலந்திருந்த அன்றைய பொழுதுகளை நினைக்கும்போது, நீங்கள் இல்லா இன்றைய பொழுதுகள் நெஞ்சில் முள்ளே(ற்)றி வலிக்கிறது ரீச்சர்.”

அன்றைய போர்ச்சூழலில் எமை எல்லாம் தரம் ஆறுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் வேற்று நாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து போய்விட்டீர்கள். அதற்கு பின்னரான காலங்கள் கொடிதிலும் கொடிது. கடிதினும் கடிது. ஏதேதோ அசம்பாவிதங்கள் எல்லாம் நடந்துபோச்சு ரீச்சர். எனது வகுப்பு நண்பர்கள் பலரை யுத்தம் காவு கொண்டுவிட்டது. அருமை நண்பன் ராஜ்குமார் உட்பட பலர் அரச படைகளால் கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் உடல் அவயங்களை இழந்து அவதியுறுகிறார். இரத்தமும் தசையுமாக ஆழ இழையோடிக்கிடக்கும் இத்தகைய துன்பியல் நிகழ்வுகளை, இழப்புகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பே இல்ல ரீச்சர்.

எங்களுடைய உயர்தரகற்கை வரை நீங்கள்கூடவே இருந்திருந்தால், நாங்கள் எங்களது வாழ்க்கையை இன்னும் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடிந்திருக்கும் ரீச்சர். இருந்தும், நீங்கள் நல்லதோர் வடிகால் செய்திருக்கிறீர்கள். நாம் அதன் வழி ஓடிக்கொண்டிருக்கின்றோம் பெரு(ம்) விளைச்சல் ஒன்றுக்காக!

நாளும் எனைக்கடந்து செல்கின்ற பழக்கப்பட்ட முகங்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று பலரிடமும் தவறாமல் கேட்கிறேன். “ஜெயராணி ரீச்சரை கண்டனீங்களா?” “ஜெயராணி ரீச்சரின்ட தொடர்பு கிடைச்சுதா?” ஒரு சிலர் உதட்டை பிதுக்கிக்கொண்டு கையை பிசைகிறார்கள். இன்னும் சிலர் கையை விரித்துக்காட்டிக்கொண்டே நகர்கிறார்கள். ஜெயராணி ரீச்சர் நீங்கள் எங்கிருந்தாலும் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு wetamizhar@live.in மின்னஞ்சல் அனுப்புங்கள் ரீச்சர்.

இந்தப்பகிர்வை (சு)வாசிக்கும் ஜெயராணி ரீச்சரை தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து ரீச்சருக்கு தகவல் கொடுங்கள்.

அதோ திசைகள் வெளிக்கின்றன. ஆலய மணியோசைகளும், சந்தனமும் ஜெவ்வாதும் காற்றில் கலந்து கரைகின்றன. வரவிருக்கும் விடியலுக்கு ஆரத்தி எடுப்பது ரொம்பவும் பிரமாதம்! “ஜெயராணி ரீச்சர்” நீங்கள் தொலைவானம் அல்ல, எப்போதும் போலவே எமக்கு தொடுவானம் தான்! ஏலவே நம்பிக்கை இருக்கிறது ரீச்சர். கிஞ்சித்தும் பயமில்லை. நாங்கள் விட்ட இடத்திலிருந்தே மறுபடியும் தொடங்குவோம், தொடருவோம் என்று.

பக்கம் வருவீர்கள், திசை காட்டுவீர்கள், இயற்கையை அழகாக்குவீர்கள் என்று. இல்லை, இயலாது, முடியாது என்பதை தவிர்த்து ஆம், முடியும், முயற்சிப்போம் என்கிற நம்பிக்கை வித்துகளை என்னுள் விதைத்தே இருக்கிறன். காலம் கனிந்து வரும்வரை எல்லாமே நமக்காக!

குறைவில்லா(த) இதே நம்பிக்கையோடும், “நல்லவர்களை மட்டும் நெஞ்சில் சுமப்போம், நல்லவைகளை மட்டும் நினைவுகளாக வளர்ப்போம்” என்கிற நிறைந்த வைராக்கியத்தோடும், அலாதிப்பிரியத்தோடும் கண்கள் பனிக்க உங்கள் உறவுக்காக வரவுக்காக காத்திருக்கும்…

இப்படிக்கு
உங்கள் மாணவன்,

மெத்த கனிவுடன், நிறைந்த நம்பிக்கையுடன்…
அ.ஈழம் சேகுவேரா

இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
அ.ஈழம் சேகுவேரா
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு:
wetamizhar@live.in

Exit mobile version