Sin Nombre ஸ்பானிய திரைப்படத்தை முன்வைத்து
காதலும் சாகசங்களும் இல்லாது வாழ்க்கை நகர்வதில்லை.
ஹண்டோரஸில் இருக்கும் ஸயீராவையும் (Sayra), அவரது மாமாவையும் அமெரிக்காவிற்குக் கூட்டிப்போக, தந்தை நியூ ஜேர்சியிலிருந்து வருகின்றார். ஆனால் இவர்களிருவரையும் முறையான வகையில் அமெரிக்காவுக்குக் கூட்டிச் செல்ல முடியாது. எனெனில் இவர்களிடம் எல்லை கடப்பதற்கான விஸா கிடையாது. ஹண்டோரஸில் இருந்து மெக்சிக்கோ எல்லை வரை முதலில் போகவேண்டும். அதுவே மிகுந்த ஆபத்தான பயணமாகும். பிறகு மெக்சிக்கோ எல்லையிலிருந்து மெக்சிக்கோ-அமெரிக்கா எல்லைப் பாதுகாவலரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அமெரிக்காவுக்கு எல்லை கடக்கவேண்டும்.
ஸயீராவும், அவரது குடும்பத்தினரும் தோட்டங்களினூடாகவும் குறுகிய பாதைகளினூடாகவும் தொடர்ச்சியாக நடந்து சென்று, சரக்குகளை ஏற்றிச்செல்லும் ரெயினொன்றில் ஏறுகின்றார்கள். ரெயினில் உரியதான இருக்கைகள் கிடையாது. மேற்கூரையிலோ அல்லது பொருட்கள் ஏற்றியது போக மிச்சமிருக்கும் சொற்ப இடத்திலோ நெருக்கி உட்கார வேண்டும். அவ்வபோது ரெயில் தரித்து நிற்கும்போது தண்டவாளத்திலேயே படுத்தும், அருகிலிருக்கும் வசதி குறைந்த இடத்தில் குளியல்/இன்னபிற இயற்கை உபாதைகளைச் செய்வதற்காய் இடங்களைத் தேடியாக வேண்டும்.
ரெயினின் மேற்கூரையில் ஸயீராவும் அவரது குடும்பத்தினரும் உட்கார்ந்து பயணிக்கின்றார்கள். இரவோ, குளிரோ, காற்றோ எல்லாவறையும் தூக்கமில்லாது தமது எதிர்காலக் ‘கனவு’ வாழ்க்கைக்காய்த் தாங்கிக்கொள்கின்றார்கள். அவ்வப்போது சில எல்லைகளைக் கடக்கும்போது பொலிஸின் கைகளில் பிடிபடாமல் ரெயினிலிருந்து இறங்கி ஓடி ஒளிந்தோ அல்லது இலஞ்சம் கொடுத்தோதான் போகவேண்டியிருக்கிறது. இவ்வாறாக ஸயிரா குடும்பத்தினரின் பயணம் ஒரு புறத்தில் நிகழ்ந்துகொண்டிருக்க, இன்னொரு கதை இதற்குச் சமாந்தரமாய்ச் சொல்லப்படுகின்றது.
2.
மெக்ஸிக்கோவில் இருக்கும் பல்வேறு வன்முறைக் குழுக்களில் ஒன்றில் விலி(Willy) உறுப்பினராய் இருக்கின்றார். கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் என எல்லாவித செயல்களையும் எவ்வித குற்றவுணர்வும் இன்றிச் செய்கின்றார்கள். தங்கள் எதிராளிக் குழுவைச் சேர்ந்தவர்ககளை -நாம் நினைத்தே பார்க்கமுடியாத அளவில்- சித்திரவதைகள் செய்து கொலை செய்கின்றார்கள். புதிதாகத் தங்கள் குழுவில் உறுப்பினர்களைச் சேர்க்கும்போதும் அவர்கள் எவ்வளவு உறுதியானவர்கள் என்பதை அறிய, மூர்க்கமான உடல்வதை செய்து தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். தாம் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பெருமிதமாகக் காட்டுவதற்கும், பிறரை அச்சுறுத்தச் செய்வதற்குமாய் -எந்தக்காலத்திலும் அழிய முடியாதவளவுக்கு- தமது குழுவின் பெயரைப் பச்சைக் குத்திக்கொள்கின்றார்கள். இவர்களுடைய செயற்பாடுகள் மெக்சிக்கோவில் மட்டுமில்லாது அமெரிக்கா போன்ற நாடுகள் தாண்டிய அளவில் இருக்கிறது.
பதின்ம வயதிலிருக்கும் விலி, பத்து பதினொரு வயதிருக்கும் ஒரு சிறுவனை தங்கள் குழுவுக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றான். சிறுவனைக் குழுவில் சேர்க்கமுன்னர் குழுவைச் சேர்ந்த எல்லோரும் அடித்து உதைத்து அவனை ‘வீரனா’க்குகின்றார்கள். களம் பல காண்பதற்கு ‘கன்னி’ முயற்சியாக ஏற்கனவே பிடித்து வைத்திருந்த எதிர்க்குழுவினன் ஒருவனைச் சுட்டுக்கொல்ல சிறுவன பணிக்கப்படுகின்றான். சிறுவனும், விலியின் உதவியோடு தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கின்றான்.
இவ்வாறு ஒரு கொடூரமான குழுவிலிருக்கும் விலிக்கு காதலால் வில்லங்கம் வருகின்றது. சாதாரணமாக இவ்வாறான குழுக்களில் இருப்பவர்கள், தங்கள் குழுக்களைச் சார்ந்த பெண்களோடு பழகுவதைத் தவிர்த்து பிற பெண்களோடு பழக அனுமதிக்கப்படுவதில்லை என்பது உலகிலுள்ள அநேக வன்முறைக் குழுக்களுக்குப் பொதுவான ஒன்று. இங்கே விலி வெளியிலிருக்கும் ஒரு பெண்ணை நேசிக்கின்றான். தான் பழக்கியெடுத்த சிறுவனைக் காவலுக்கு விட்டுவிட்டு அப்பெண்ணோடு காதல் சரசமாடுகின்றான். விலிக்குக் கொடுக்கப்பட்ட வேலையையெல்லாம் ஒழுங்காகச் செய்யாது விலி காதற்போதையில் மூழ்கிக் கிடப்பதைக் குழுத்தலைவன் கண்டுபிடிக்கின்றான். ஒருநாள் அவர்களின் குழுவிருக்கும் இடத்துக்கு வரும் விலியின் காதலியை பாலியல் பலாத்காரம் செய்ய குழுத்தலைவன் முற்பட, அதிலிருந்து தப்பிக்க முயலும் விலியின் காதலியைத் தலைவன் அடிக்க அவள் தலை மோதி இறந்துவிடுகின்றாள். தன் காதலிக்கு நிகழ்ந்தது குறித்து அறிந்தும் விலியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. குழுவிற்கோ, குழுத்தலைவனுக்கோ எதிராக குரல் எழுப்புவர்கள் நீண்டகாலம் உயிரோடு இருந்ததாய் அவர்களுடைய வரலாற்றில் இல்லை. இவ்வாறாக துயரத்தையும் வெஞ்சினத்தையும் தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கும் விலியை, ஒருநாள் கொள்ளை அடிக்கப் போவதற்காய் குழுத்தலைவன் கூப்பிடுகின்றான். கூடவே விலி பழக்கிய சிறுவனும் போகின்றான். இவர்கள் கொள்ளையடிக்கத் தேர்ந்தெடுத்த இடம், ஸயிராவும், தகப்பனும் வந்துகொண்டிருக்கின்ற கூட்ஸ் ரெயின்.
தமது ஆயுதங்களைக் காட்டிப் பணத்தையும் உடைமைகளையும் பறிக்கின்ற விலியின் குழுத்தலைவனுக்கு, சயீரா மீது சபலம் ஏற்படுகின்றது. சயீராவைதக் குழுத்தலைவன் அடுத்து என்னச் செய்யப்போகின்றான் என்பதை உய்த்துணரக்கூடிய விலி -பின்விளைவுகள் குறித்து யோசிக்காது- ரெயினின் மேற்கூரையில் வைத்துக் கொன்று விடுகின்றான். கூடவே இருக்கும் சிறுவனையும் ஓடிப்போய்விடு என்று துரத்திவிடுகின்றான். அடுத்து என்ன செய்வது என்று அறிய முடியாது -தொடர்ந்து அந்த ரெயினிலேயே- பயணிக்கின்றான். கூடப்பயணிக்கும் பயணிகளுக்கு இப்படியொரு வழிபறிக் கள்வனோடு/கொலைகாரனோடு பயணிப்பதில் உடன்பாடில்லை. அவர்கள் விலியை கொலை செய்வதற்கான சந்தர்ப்பத்திற்காய்க் காத்திருக்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்கள் வரும்போது சயீரா தன் சாமர்த்தியத்தால் விலியை ஓடும் ரெயினிலிருந்து காப்பாற்றிவிடுகின்றாள்.
சயீராவுக்கு விலி தன்னைக் காப்பாற்றியவன் என்றவகையில் விலி மீதோரு பதின்ம ஈர்ப்பு வருகின்றது. அவனைத் தனது ரெயில் பயணத்தில் -பறவையொன்று தன் சிறகுகளுக்குள் பாதுகாக்கும் குஞ்சாய்- தொடர்ந்து காப்பாற்றியபடி வருகின்றாள். தன் மீதான சயீராவின் ஈர்ப்பை விலி அறிந்திருந்தாலும், தங்கள் குழுத்தலைவனைக் கொன்றதால் தனக்கான நிலையான வாழ்வு இனிச் சாத்தியமில்லை என்பதை விலி நன்கு அறிந்தே வைத்திருக்கின்றான். அதன் நிமித்தம் சயீரா உறங்கும் ஓர் பொழுதில் ரெயினில் இருந்து இறங்கிப்போகின்றான. சயீரா நிம்மதியாக அமெரிக்காப் போய்ச்சேர்ந்துவிடுவாள் என்ற நினைப்பு, அவனைப் பின் தொடர்ந்து வரும் சயீராவைக் கண்டு குலைகின்றது. சயீராவைக் கண்டு பதட்டமாகி மீண்டும் இருவரும் ரெயினில் ஏறுவதற்குள் ரெயின் புறப்பட்டும் விடுகின்றது. விலி சயீராவைக்கூட்டிக்கொண்டுபோய் -தனக்கு குழுவால் ஏற்கனவே பழக்கம் ஏற்பட்ட ஒருவரிடம்- தனக்கு உதவி செய்யும்படி வேண்டுகின்றார். இதற்கிடையில் தலைவன் கொல்லப்பட, பிற உறுப்பினர்கள விலியைத் தேடி சிறுவனுடன் அலையத்தொடங்குகின்றார்கள். விலியும், சயீராவும் எல்லை கடந்து அமெரிக்காப் போய்ச்சேர்ந்தார்களா என்பதும் சயீராவின் தகப்பனுக்கும் மாமாவுக்கும் என்னவாயிற்று என்பதும் படத்தில் தொடர்ச்சியில் வருபவை.
3.
கதை என்று பார்க்கும்போது இது ஒரு மிகச்சாதாரண கதை. ஆனால் அதை படமாக்கியவிதந்தான் அதிகம் வசீகரிப்பதாயிருக்கின்றது. படம் முழுதும் ரெயின் தொடர்ந்து வந்தபடியிருக்கின்றது. ரெயின் நுழையும் ஒவ்வொரு புதிய நிலப்பரப்பும் தனக்குரிய கதையைச் சொல்கின்றது. ரெயினில் இவ்வாறு மேலே குந்திக் கள்ளமாய்ப்போபவர்கள் பற்றி ஊர்களிலுள்ள மக்கள் நன்கு அறிவார்கள் போலும். சில ஊர்களில் மக்கள் தங்கள் கைகளிலிருந்த பழங்களை ரெயினின் மேல் இருப்பவர்கள் மீது (உணவாக்கிக் கொள்ள)எறிகின்றார்கள். சிலவேளைகளில் இப்படி தங்கள் பசியை ஆற்றிக்கொள்ள ஏதாவது கிடைக்கும் என்று ரெயினுள்ளவர்கள் எதிர்பார்க்கும்போது சில சிறுவர்கள் குறும்புத்தனமாய் கற்களால் எறிகின்றார்கள்.
இந்த எல்லை கடத்தல் பயணத்தைத் தொடங்கும்போது, ஒரு போதும் எந்த இடத்திலும் மீண்டும் திரும்பிப்போக முடியாது என்பதை அறிந்தே தொடங்குகின்றார்கள். அது எவ்வளவு பதற்றமாகவும் பயமாகவும் இருக்கும் என்பதை இப்படியான பயணங்களை மேற்கொண்டவர்கள் நன்கறிவார்கள். மேலும் ஏற்கனவே இப்படி தமது ‘கனவு வாழ்க்கையை’ அமைக்க எல்லை கடந்தவர்களில் பலர் இடையிலேயே தமது வாழ்வை மரணத்திலேயே முடித்துக்கொண்டவர்கள் என்பதையும் இந்தப் பயணத்தை மேற்கொள்பவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். இவ்வாறான பயணங்களைச் செய்ய இவ்வளவு ஆபத்துகளுக்கும் அப்பால் உந்தித்தள்ளச் செய்பவை அவர்களுக்கு வாய்த்த சபிக்கப்பட்ட வாழ்க்கை என்பதை -ஸயீரா போன்றவர்களின் வாழ்வோடு நெருக்கமானவர்கள்- நன்கு அறிவார்கள்.
இந்தப்படத்தில் முக்கிய பேசுபொருளே எல்லை கடத்தலும் அதன் ஆபத்தும் தான். ஆனால் எதற்காய் இவ்வாறான ஒரு தேர்வை இந்த மக்கள் ஆபத்துக்களுக்கிடையில் தேர்ந்தெடுகின்றார்கள் என்பதற்காய்த்தான், அவர்களுடைய வாழ்விடப் பின்புலத்தில் குழுவன்முறையும் வறுமையும் காட்டப்படுகின்றது போலும். இங்கே விலிக்கும், சயீராவுக்கும் இடையில் முகிழும் மெல்லிய காதல் கூட நாம் சக மனிதர்கள் மீது வைக்கவேண்டிய அன்பைத்தான் வலியுறுத்துகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது. எல்லாவற்றையும் இழந்து புறப்படும்போது இப்படியான சக மனுச அன்பும் இல்லாதுவிட்டால் ப்ரவக்கூடிய வெறுமையை எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதே உண்மையானது. படத்தில் ரெயின் ஊடறுத்துச் செல்லும் நிலப்பரப்புகளின் பசுமையையும் அதற்கு அப்பால் நீள்கின்ற மிக மோசமான வறுமையையும் துல்லியமாகப் படமாக்கப்பட்டிருகின்றன. விலி, சயீரா, சிறுவனாய் நடிப்பவர்கள் எல்லாம் அந்தப் பாத்திரங்களைப் போல இயல்பாய் நடித்திருக்கின்றார்கள்.
விலியால் வளர்க்கப்படும் சிறுவனே, பிறகு தன்னை அக்குழுவின் நம்பிக்கைக்கு உரியவானாக்க் காட்டிக்கொள்வதற்காய் விலியைக் கொலை செய்ய வெறியுடன் திரிபவனாக அலைவதும் வாழ்க்கைதான். இவ்வளவு கொடூரமான குழுவிலிருந்த விலியின் மனதிலும் அன்பு கசியக்கூடியதென கண்டுபிடிப்பவளாய் -மென்னுணர்வுகளைத் தட்டியெழுப்புபவளாய் சயீரா இருப்பதும்- அதே வாழ்க்கை நீரோட்டத்தில்தான். நாம் யார் யாரைச் சந்திக்கின்றோம் என்பதில் நமது வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகின்றது எனபது கூட ஒருவகையில் உண்மைப்போலத்தான் தோன்றுகின்றது.