ஒரு பக்கம் ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை தங்களின் காலனிப்பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய நாடுகள் மத அடிப்படைவாதிகளின் கலாசார நெருக்குவாரங்களுக்குள் மக்கள் சிக்கி அல்லற் படுகின்றனர். தலிபான்கள் உள்ளிட்ட சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கலாசார பாசிஸ்டுகளாக செயற்பட்டு வருகின்றனர், ஆடைக்கட்டுப்பாடு தனி மனித வாழ்வில் திருக்குரான் வழி நடக்க நிர்பந்திப்பது என மத சுதந்திரம் என்னும் பெயரால் மக்களை குறிப்பாக பெண்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் காதலர்கள் இருவரை தலிபான்கள் கல்வீசிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதல் செய்த குற்றத்துக்காக இருவரையும் தலிபான்கள் கற்களால் வீசிக் கொன்றதாக குந்துஸ் மாகாணத்தில் உள்ள இமாம் சாஹிம் மாவட்டத்தின் ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார். வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது முல்லா கியூலி கிராமம். இக்கிராமம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஆணும், 23 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதில் ஆண் ஏற்கெனவே திருமணமானவர். பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தலிபான்கள் குற்றம்சுமத்தினர். அவர்களை முல்லா கியூலி கிராமத்தில் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து கற்களை வீசிக் கொன்றனர். காதலர்களை சுமார் 100 தலிபான்கள் சுற்றி நின்று கற்களை வீசினர்.காதலர்கள் மீது தலிபான்கள் கற்களை வீச வீச அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறினர். ஆனாலும் தலிபான்கள் விடவில்லை. காதலர்கள் சாகும்வரை கற்களை வீசினர் என்று ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார்.