Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காணி, நிதி விடயங்களில் ஆளுநரின் அட்டகாசத்தை ஏற்க முடியாது என்கிறார் சரவணபவன் எம்.பி

வடமாகாண ஆளுநர் அரச காணியொன்றை ஆக்கிரமித்து, சுமார் 10 கோடி ரூபா செலவில் தனக்கென சொகுசு மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மதில் சுவரையும் அவர் இடித்து அப்புறப்படுத்தியுள்ளார். முன்னாள் இராணுவத்தளபதியான ஆளுநர், மற்றவர்களின் சொத்துகளை இவ்வாறு அழித்து அவ்விடங்களில் பெரும்பான்மை மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன.

பொதுமக்கள் இருப்பிடம் இன்றித் தவிக்கையில், ஆளுநர் தனக்கு மாவட்டத்துக்கு ஒரு சொகுசு மாளிகை அமைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், வடக்கிலுள்ள அதிகாரிகள் அனைவரையும், ஆளுநர் சாதாரண சிப்பாய்கள் போன்று நடத்துகிறார் என்றும் தெரிவித்தார்.

அவரது உரையின் முக்கியமான சாராம்சம் வருமாறு:

ஜனாதிபதி, மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் செயற்பாடுகளை மறுபரிசீலனை செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தங்களது பங்களிப்பையும் பொறுப்புகளையும் கொண்டு சுயமாகச் செயற்படுவதை அரசு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

அவற்றினை வழக்கம் போல இந்த வருடமும் அரசு தேசிய அமைச்சுகளுக்கு வாரி வழங்கியுள்ளது. விவசாயம், கால்நடை, கடற்றொழில், விளையாட்டு ஆகிய அமைச்சுகளுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், முதியோர் நலன், மாகாண பாதைகள், நீர்விநியோகம், நீர்ப்பாசனம் போன்ற மத்திய அமைச்சுகளுக்கு வழங்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரீதியில் தயாரிக்கப்பட்ட தேசிய வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கலைப் பலவீனப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த சாதனமாக அதனை மாற்றியுள்ளது. அரசமைப்பு அதன் சட்டதிட்டங்களை நடைமுறைக்கு சாத்தியமான வழியில் அமுல்செய்ய சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என இந்தச் சபையிடம் நான் வேண்டுகோளொன்றை சமர்ப்பிக்கிறேன்.

அரசு ஒரு கையால் கொடுத்துவிட்டு மறுகையால் அதைப் பறித்துக்கொள்ளும் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். மாகாணசபைகளின் அதிகாரங்கள் மேம்படுத்தப்பட்டு, அந்தச் சபைகள் தங்களது வல்லமைகளையும் பொறுப்புகளையும் அபிவிருத்தி செய்துகொள்ள இடமளிக்க வேண்டும். அவை மேலும் பலவீனமாவதைத் தடுக்கவேண்டும்.

அதிகாரப் பரவலாக்கலை நோக்கி அரசு கடப்பாடுடன் எடுக்கும் முயற்சிகளின் நம்பகமான சமிக்ஞைகளை நாம் எதிர்பார்க்கின்றோம். மாகாண சபைகளினதும் உள்ளூராட்சி சபைகளினதும் சட்டபூர்வமான அதிகாரங்களை சிதைக்கும் கைங்கரியத்தில் மட்டுமே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு ஈடுபட்டுள்ளது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உரிமைகளைக் காப்பாற்றும் ரீதியில் அமைச்சரிடம் இருந்து இதுவரை உறுதியான வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான நிதியை மட்டுமே ஒதுக்கிவிட்டு மாகாண சபைகள் வெள்ளை யானைகள் என்று எவ்வாறு கூறமுடியும்? இந்த முறை வரவு செலவுத்திட்டத்தைக் கூர்ந்து அவதானித்தால், அரசில் உள்ள பல வெள்ளை யானைகளை நீங்கள் கண்டுகொள்ள முடியும்.

உண்மையில், அரசின் மொத்த செலவினங்களுடன் ஒப்பிடும் போது மாகாணசபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகமிக சொற்பம். அதுவும் பொதுமக்களின் பணம்தான். அந்தப் பணம் நன்மையான வழியில் செலவளிக்கப் படவேண்டும். வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது எனக்குத் தெரியாது. புள்ளி விவரங்களின்படி 2011 ஜூலை மாதம் வரை இந்த நாட்டின் மாகாண சபைகளில் வடமாகாண சபைக்கே மிகக் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் சில விடயங்களில் வதந்திகள் அடிக்கடி கொடிகட்டிப் பறக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உலவும் சில கதைகளை நான் கூற விரும்புகின்றேன். நிதி விவகாரங்களில் வடமாகாண ஆளுநரின் நேரடித் தலையீடு இருப்பதாலேயே நிதி சரியாகப் பயன்படுத்தப் படவில்லை என்ற கருத்தொன்று நில வுகின்றது. அவர் தன்னை ஒரு சில்லறைக் காசுக் கணக்காளராகவும், சான்று கூறும் அதிகாரியாகவும் தரம் இறக்கிக் கொண்டுள்ளார்.

திணைக்களத் தலைவர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளினது எந்தப் பணிக்கும் நிதி வழங்கும் போது ஆளுநரின் அனுமதியைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. குத்தகைக் காரர்களுக்குப் பணம் வழங்க ஆளுநரின் அனுமதி அவசியம். குத்தகைக்காரர் களுடன் அடிக்கடி ஆளுநர் கூட்டம் நடத்துகிறார்.

நாங்கள் “பரமார்த்த குரு’ (மஹா தன முத்தா) பற்றிய நாடோடிக் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அவரது வேடிக்கையான செயல்களால் அவருக்குக் கெட்டவர் என்று பெயர் கொடுக்கப்படவில்லை. “தான் செல்லும் வழியில் எதிர்ப்படும் மரங்களை வெட்டி வீழ்த்தியும், கட்டடங்களை இடித்தும் வழிய மைத்துக் கொண்டு அவர் செல்வார்” எனக் கேள்விப்பட்ருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இத்தகைய செயல்கள் மற்றவர்களின் விடயங்களில் மூக்கை நுழைப்பது என்பதாகக் கணிக்கப்படுகின்றது.

வடமாகாண ஆளுநர் அரச காணியொன்றை ஆக்கிரமித்து, சுமார் 10 கோடி ரூபா செலவில் தனக்கென சொகுசு மாளிகை யொன்றைக் கட்டியுள்ளார். இந்த மாளிகையைச் சுற்றியிருந்த மதில் சுவரையும் அவர் இடித்து அப்புறப்படுத்தியுள்ளார். யாழ். மாவட்ட முன்னாள் இராணுவத்தளபதியான ஆளுநர், மற்றவர்களின் சொத்துகளை இவ்வாறு அழித்து அந்த இடங்களில் பெரும்பான்மை மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்றும் தொடர்கின்றன.

இவ்வாறு பொதுமக்களின் பணத்தை அவர்களின் சம்மதம் இல்லாமல் சொந்த நலனுக்கு வாரி இறைக்கும் கொடும் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு நான் பொது நிர்வாக வீடமைப்பு அலுவல்கள் அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா நம்பிக்கை சட்டமூலம் அமுல்படுத்துவதன் மூலமாக சீரமைப்பு செய்யப்பட வேண்டும். அதனடிப்படையில் இத்தகைய ஊடுருவல்கள் எதிர்காலத்தில் நிறுத்தப்பட வேண்டும். வடமாகாண ஆளுநருக்கு பொதுமக்களின் பணத் தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகள் கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ளன. சொகுசு வாகனங்கள் உட்பட அவரது பாவனைக்கு ஏழு வாகனங்கள் உள்ளன.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கென அவர் 16 சக்திமிக்க வாயு சீராக்கிகளை (எயார் கண்டிஷனர்) வாங்கினார். அவற்றுக்கு எதிராக எழுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை அவர் மதிக்கவில்லை. அவை மண்டபத்தில் பொருத்தப்பட்டு சில மாதங்கள் வெறுமனே இருந்தன. அதன் பின், அவை கழற்றப்பட்டு யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொடுக்கப்பட்டன.

நாடாளுமன்றத்தில் மாகாணத் தலைநகர் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியை ஆளுநர் ஒருவர் நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி அமைச்சு ஒன்றின் பணிகளுக்கு வழங்க முடியுமா?

கொள்வனவுகளிலும் பல தில்லுமுல்லுகள் நடப்பதாகத் தெரிகிறது. ஆளுநர் ஆயிரக்கணக்கான சைக்கிள்களையும், சேலைகளையும் வாங்கி உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது சந்தை விலையை விட மேலதிகமான விலையில் விற்பனை செய்துள்ளார் என்ற வதந்தி அங்கே நிலவுகின்றது. பிரதேச செயலாளரின் அலுவல்களில் ஆளுநர் தலையிட்டது புதிய செய்தி.

ஆளுநரின் இணைப்புச் செயலாளரான மேஜர், மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகளில் முக்கியமான தீர்மானங்களை எடுத்து வருகிறார். யாழ்ப்பாண நூலகத்துக்கு சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான புத்தகங்களை வாங்குவதற்குக் கொள்வனவுக் கட்டளைகளை அனுப்பியுள்ளார். புத்தகங்களின் தெரிவு, வழங்குநர்களின் தெரிவு போன்ற வழக்கமான நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்த மேஜர் மூன்று மாடிகளைக் கொண்ட சொகுசு மாளிகையொன்றைக் கட்டியுள்ளார். அத்துடன், மக்கள் பணத்தில் சொகுசு வாகனம் ஒன்றையும் வாங்கியுள்ளார். ஆளுநரின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அவரது அநாகரிகமான பேச்சால் அவரை நெருங்கவே பயப்படுகிறார்கள். அவர்கள் சாதாரண சிப்பாய்கள் போல நடத்தப்படுகிறார்கள். கண்மூடித்தனமாக இட மாற்றம் செய்யப்படுகிறார்கள். அடிக்கடி ஏச்சு வாங்குகிறார்கள். உண்மையில், பெரும்பாலானவர்கள் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தால் வேறு இடங்களுக் குப் போகத் தயாராக உள்ளார்கள். வட மாகாண சபையின் அவலநிலை இப்படி இருக்கிறது.

மிக நீண்டகால இடைவெளிக்குப் பின்பு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் ஒன்று நடந்ததை நீங்கள் அறிவீர்கள். சாதாரண மட்டத்தைச் சேர்ந்த புதிய சந்ததித் தலைவர்கள் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ளூராட்சி ஆளுமைபற்றிக் கற்பிக்க வேண்டியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். உள்ளூராட்சி அமைச்சின் மாகாணத் திணைக்களத்தால் அவர்களுக்குப் பயிற்சி அளிக் கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பிரதிநிதிகளான அவர்கள் மாகாணசபையின் அலுவல்களைக் கவனிக்க உரித்துள்ளவர்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என்பதற்காக அவர்கள் உள்ளூராட்சி அலுவல்களில் ஈடுபடுவதைப் புறக்கணிக்க முடியாது. அவர்கள் உத்தியோகபூர்வ வைபவங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. இதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடமாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர் களின் இன்றைய அவலநிலை. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மரியாதை, கௌரவம் போன்ற மனித உரிமை மீறல் எங்கும் இல்லை. மக்களைப் பாதிக்கும் எந்தவித நடவடிக்கைகளையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது.

பிராந்திய சமச்சீரானது சம்பந்தப்பட்ட வளங்களும் அதிகாரங்களும் அரசின் ஆளுமையின் அடுத்த கட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே நிறைவேறும். வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிதிப் பிரேரணைகளும் கொள்கைகளும் ஜனாதிபதி பிரகடனப்படுத்திய சிறந்த ஆளுமை, சமாதானம், அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஒருபோதும் வழியமைக்கப் போவதில்லை.

Exit mobile version