Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே!

20.09.2008.

கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பிந்திய அறிக்கைகளின் படி கடத்தல்கள் குறைவடைந்திருப்பதாகக் கூறும் அரசாங்க அதிகாரிகள், ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்தவிதமான அக்கறையும் செலுத்துவதில்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
கடத்தல்கள் தொடர்பாக பெருமளவான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாலேயே காணாமல்போதல் சம்பவங்கள் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. கடத்தல்களைக் குறைப்பதற்குத் தம்மாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டிருப்பதாக பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறியிருந்தார். “கடத்தல்கள் நடைபெறுவதில்லையென்பதை உறுதிப்படுத்துவதற்குப் பல பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார் அவர்.
அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு காரணமல்ல
அதிகரிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பே கடத்தல் மற்றம் காணாமல்போதல் சம்பவங்கள் குறைவடைந்தமைக்குக் காரணம் எனக் கூறுவதை மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் மறுத்துள்ளார். கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை தற்பொழுது குறைவடைந்திருந்தாலும் நிச்சயமாக சிறிது காலத்தில் அது அதிகரிக்கும், இவ்வாறே கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது என அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் எனத் தம்மை அடையாளப் படுத்தியவர்களாலேயே கூடுதலான கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த மனோ கணேசன், கடத்தல் காரர்களில் சிலர் இராணுவச் சீருடைகளிலும் சென்றுள்ளார்கள் எனவும் கூறினார். முன்னாள் விமானப்படை அதிகாரி கஜநாயக்க கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட காலப் பகுதியில் கடத்தல்கள் ஓரளவுக்குக் குறைவடைந்திருந்தன என்றும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடத்தல்கள் குறைவடைந்துள்ளன அல்லது கடத்தல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துவது மாத்திரம் அரசாங்க அதிகாரிகளின் கடமையல்ல எனவும், பாதிக்கப்பட்டிருக்கும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமையெனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்குத் தம்மால் முடிந்தவரை முயற்சிப்பதாகத் தெரிவிக்கும் அரசாங்க அதிகாரிகள், காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கும் உதவுவதாகக் கூறுகின்றனர்.
கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டவர்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படுவதாக காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினரும், தொழில்சார் கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சிகள் பிரதி அமைச்சருமான பி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
காணாமல்போய் இதுவரை திரும்பாதவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்திருப்பதாக அமைச்சர் கூறுகிறார். “காணாமல் போனவர்கள்களைக் கண்டறிவதற்கு அரசாங்கம் முழு முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது” என்றார் அமைச்சர். 
எனினும், கூடுதலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலேயே கூடுதலான கடத்தல்கள் இடம்பெற்றிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பாதுகாப்பத் தரப்பினருக்கு அல்லது பொலிஸாருக்குத் தெரியாமல் இந்தக் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லையென மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோ கணேசன் வாதிடுகிறார்.
பொது இடங்களில் எவ்வாறு இந்த ஆட்கடத்தல்கள் நடைபெறுகின்றன என்பது தொடர்ந்தும் விவாதத்துக்குரிய விடயமாக உள்ளதென ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்கள் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவினர்களால தேடப்படுபவர்கள் காணாமல் போகின்ற சம்பவம் குறித்து இம்மாதம் 22ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவர் ஆர்.யோகராஜன் கூறினார்.
www.inllanka.com
Exit mobile version