Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காணாமல் போனவர்களினதும் தொகையைத் திரட்டும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக, கோதாபய ராஜபக்ஷ ..

இறந்தவர்களினதும் காணாமல் போனவர்களினதும் தொகையைத் திரட்டும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சர்வதேச உறவுகள் மற்றும் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற “நல்லிணக்கம்’ “யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான மார்க்கம்’ என்ற
கருப்பொருளில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இந்தத் தொகை மதிப்பீட்டில் பூரணப்படுத்துவதற்கான இலக்கு, வடக்கிலுள்ள அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் ஒவ்வொரு தனிநபரினதும் பெயர் விபரங்கள் திரட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளதுடன், தொகை மதிப்பீட்டுக்காக திரட்டப்படும் இந்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இயற்கையான காரணங்களினால் இறந்தவர்கள், விபத்துகளினால் பலியானவர்கள், புலிகளுக்காக சண்டையிட்டு இறந்தவர்கள், புலிகளுக்காக சண்டையிட நிர்ப்பந்திக்கப்பட்டு இறந்தவர்கள், புலிகளை எதிர்த்து இறந்தவர்கள், படகுகளில் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு சென்றபோது இறந்தவர்கள் என்று மரணங்களைப் பல்வேறு வகைகளாக நாம் வகுத்திருக்கின்றோம் என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இராணுவத்தால் இறந்தவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையானவர்களே என்றும் நம்பகரமான குற்றசாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், இந்த மரணங்களுக்கான வாய்ப்பை இராணுவம் எடுத்துக்கொள்ளும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, இராணுவத்திற்கு எதிராக அதிகரித்துவரும் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதை இந்தத் தொகை மதிப்பீடு நோக்கமாகக் கொண்டிருக்கின்றது என்றும் ஏ.எவ்.பி.செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தில் பொதுமக்கள் இழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்று அண்மைக் காலம்வரை அரசாங்கம் தெரிவித்துவந்தது. யுத்தத்தின் இறுதிக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் இழப்புகள் ஏற்பட்டதாக ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், பொதுமக்கள் இழப்புகள் சம்பவத்திருப்பதாகவும் ஆனால்,அவை தவிர்க்க முடியாதவையெனவும் அரசாங்கம் முதற்தடவையாக இப்போது ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் ஏ.எவ்.பி.செய்திச் சேவை குறிப்பிட்துள்ளது.

Exit mobile version