
26 .05 .2012 , சனிக்கிழமை ஆம்ஸ்டர்டாம் நகரில் ஆர்ப்பாட்டம்
31 .05 .2012 , டென் ஹாக் நகரில் மறியல் போராட்டம்
அரசியல் படுகொலைகள், சித்திரவதைகள், நீண்டகால சிறைத் தண்டனைகள், இரகசிய தடுப்பு முகாம்கள், இவற்றோடு, காணாமல் போகச் செய்யும் அரச பயங்கரவாதமும் உலகின் பல நாடுகளில் நடைபெறுகின்றது. செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி காணப்படும் நாடுகளில், மக்கள் நிறுவனமயப் பட்டு எழுச்சி கொள்ளும் நேரங்களில், இந்த காணாமல்போதல்கள் இடம்பெறுகின்றன. சமூகத்தின் எதிர்ப்புணர்வை முறியடிப்பதற்கான திட்டம் அது. துருக்கி, குர்திஸ்தான், சிறிலங்கா, கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளில், ஆயிரமாயிரம் காணாமல்போனவர்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
இந்த வருடம், பின்வரும் நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை, காணாமல்போதல்கள், சமூக, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின் மீது கவனத்தை குவிக்கின்றோம்.
– ஆப்கானிஸ்தான்
– பிலிப்பைன்ஸ்
– இந்தியா
– சிறி லங்கா (தமிழ் மக்கள்)
– துருக்கி/குர்திஸ்தான்
காணாமல்போதல்கள் என்றால் என்ன?
அரச எதிர்ப்பாளர்கள், அரச படைகளினால், அல்லது துணைப் படைகளினால், கடத்தப் பட்டு, கொலை செய்யப் பட்டு, யாரும் அறியாத இடத்தில் புதைத்து வைப்பதாகும். கடத்தப்பட்டவர்கள், கடத்தப் பட்டனரென பொதுவாகவே பலருக்கும் தெரிந்திருக்கும். கடத்தப் பட்டவர்களின் உறவினர்கள், அவர்களது உயிரை எண்ணி கவலைப் படுவதுடன், அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்புகின்றனர். அச்சமுற்ற உறவினர்கள் நம்பிக்கையுடனும், சந்தேகத்துடனும் காலம் கழிக்கின்றனர்.
அமெரிக்காவினாலும், மற்றைய ஏகாதிபத்திய நாடுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளிலும் இரகசிய சிறைச்சாலைகளை பயன்படுத்துகின்றார்கள். சி.ஐ.ஏ. விமானங்களில் கடத்தப்படும் மனிதர்களை, இந்த சிறைகளில் பூட்டி வைத்து சித்திரவதை செய்கின்றனர்.
தடுத்து வைக்கப் படும் காலங்களில் காணாமல் போதலின் அரசியல்
எதிர்ப்பாளர்களை உடல் ரீதியாக அழித்தொழிப்பது மட்டுமல்ல, சமூகத்தையும் பயமுறுத்துவதே இந்த அரசியலின் நோக்கம். தொழிலாளர்களும், பிற உழைக்கும் மக்களும் ஒன்று சேர்வதும், தமது உரிமைகளுக்காக போராடுவதும், வேறு வகையான சமூக கட்டமைப்புக்காக செயல்படுவதும் தடுக்கப் படுகின்றது. தலைமை தாங்கும் தொழிற்சங்க தலைவர்களும், தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப் படுகின்றனர்.
BP, Shell, Mobil Oil, Esso, Coca Cola, IG Farben, Chiquita/United Fruit Company, Mercedes Benz, Euro Gold, Dow Chemical, Bacardi போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலாளர்களை மென்மேலும் சுரண்டுவதுடன், சுற்றுச் சூழலை மாசு படுத்துகின்றனர். அதற்கெதிராக கிளர்ந்தெழுவோர் துடைத்தெறியப் படுகின்றனர்.
பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்திற்காக, அநீதியான போர், ஆக்கிரமிப்பு, கடத்தல் போன்றவற்றினூடாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையின் கீழ் மனித உரிமைகள் பெருமளவு மீறப் படுகின்றன. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதில் மட்டுமே நெதர்லாந்து அரசின் பங்கு நின்று விடவில்லை. பல வகையான அடக்குமுறை அரசுகளுக்கு அது ஆயுத விநியோகம் செய்துள்ளது. உதாரணத்திற்கு, இந்தோனேசியாவுக்கு தாங்கிகளும், கடற்படைக் கப்பல்களும் விற்கப் பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து, தமது அதிகாரத்தை விரிவாக்கும் நோக்கத்திலான அமெரிக்காவினதும், நேட்டோ நாடுகளினதும் யுத்தங்கள், மனிதர்களின் வாழும் உரிமையை மீறுகின்றது. ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன், சுயநிர்ணய உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு சிறிலங்கா (தமிழர்கள்), இந்தியா, பிலிப்பைன்ஸ், குர்திஸ்தான், பலுசிஸ்தான், மேற்கு சஹாரா, பாலஸ்தீனா, பாஸ்க் நாடு, வட அயர்லாந்து.
லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், ஒரோமோ, பேர்பர் போன்ற பூர்வ குடி மக்கள் மீதான சுரண்டலும், அடக்குமுறையும் அதனோடு பின்னிப் பிணைந்துள்ளது.
பொது மக்களினதும், சர்வதேச சமூகங்களினதும் பரந்து பட்ட ஆதரவின் மூலமே, மனித உரிமை மீறல்கள், காணாமல் போதல்களை தீர்க்கமாக எதிர்த்துப் போராட முடியும்.
அரச பயங்கரவாத்தை நிறுத்து! காணாமல்போதலை நிறுத்து!
காணாமல் போனவர்களின் விபரங்களை பகிரங்கமாக்கு! சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு!
(நெதர்லாந்து மொழியில் அமைந்த துண்டுப் பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு-இந்திரன் சின்னையா)