03.9.2008.
இலங்கையில் பெருமளவானவர்கள் பலவந்தமாகக் காணாமற் போனதன் பின்னணியில் உள்ள நபர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்படுகின்றனர் என விசனம் வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, காணாமற் போதல் குறித்து விசாரணை செய்வதற்கு சுதந்திரமான அமைப்பொனறு இலலாததால் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பலாம் என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் பலவந்தமாக காணாமற்போதல் பரந்துபட்டளவில் காணப்படுகின்றது. கடந்த 18 மாதங்களில் மாத்திரம் பெருமளவிலானவர்கள் காணாமற்போயுள்ளனர்.
பலவந்தமாக காணாமற்போதல் குறித்த ஐக்கிய நாடுகளின் செயற்குழு மே, ஜூன் மாதங்களில் 22 பேர் காணாமற் போயுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல குடும்பங்கள் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிடுவதில்லை.
2008 மே 15இல் நோர்வேயைச் சேர்ந்த அரசசாளர்பற்ற அமைப்பொன்றின் வாகனச் சாரதி செபஸ்ரியன் குட்மெசேக காணாமற் போயுள்ளார்.
பாதுகாப்பு படையினரின் ஆதரவுடன் செயற்படும் ஆயுதக் குழுவொன்றினால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், கிறிஸ்தவ மதகுரு ஜிம் பிரவுண் @பான்றவர்களும் காணாமற் போயுள்ளனர். இவர்கள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகாமல் உள்ளன.
இதேவேளை காணாமற் போதலிற்கு காரணமானவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
காணாமற்போதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று ஆணைக்குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எனினும் குறிப்பிட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறியத் தரப்படாததுடன் அவசரகாலச் சட்டத்தையும் நீக்கவேண்டும் என ஆணைக்குழுக்கள் முன்வைத்த பரிந்துரையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆணைக்குழுக்கள் காணாமற்போதலின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்த விசாரணைகளை வழங்கியுள்ளபோதிலும் ஓரிருவர் மாத்திரமே நீதிமன்றத்துக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.