Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காங்கிரஸ், பாஜக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம்:து.ராஜா

காங்கிரஸ் ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு அளிக்கமாட்டோம். அதுபோல் பாஜக ஆட்சி அமைக்க இடம் தர மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா தெரிவித்தார்.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.தொலைக்காட்சி சேனல் மற்றும் பத்திரிகைகளில் வந்துள்ள வாக்குக் கணிப்பு, கருத்துக் கணிப்பு முடிவுகள் மக்களின் உண்மையான எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்காது. மே 16-ம் தேதிக்குப் பின்னர் எதையும் உறுதியாகக் கூற முடியும். காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு தருமாறு கோரி இந்தத் தேர்தலில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். எங்களது கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வரும் 16-ம் தேதி இது தெரிந்துவிடும் என்றார் அவர். மூன்றாவது அணி சிறப்பான வெற்றி பெற்று புதிய ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அணி உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மூன்றாவது அணியில் புதிய கட்சிகள் வந்து இணையும். எந்தக் கட்சி மூன்றாவது அணியில் வந்து சேரும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார் ராஜா.

கேரளத்தில் இடதுசாரிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கணிப்புகளில் தெரியவந்துள்ளதே என்று கேட்டபோது, கணிப்புகளை எல்லாம் ஏற்கமுடியாது. மேலும் தேர்தலில் ஓரிரு இடங்களில் வெற்றி அல்லதுதோல்வி பெறுவதை வைத்துக் கொண்டு இடதுசாரிகளுக்குப் பின்னடைவு என்று சொல்ல முடியாது என்றார் அவர்.

தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இடதுசாரிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தனித் தனியாக கூடி விவாதிக்க உள்ளன. திங்கள்கிழமை மூன்றாவது அணித் தலைவர்கள் கூட்டம் தில்லியில் நடைபெறும் என்றார் ராஜா.

அமெரிக்க சிறப்புத் தூதர் பீட்டர் புர்லீக் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானியை தில்லியில் சந்தித்துப் பேசி உள்ளது குறித்து கருத்து கேட்டபோது, அன்னிய நாடுகள் நமது அரசியலில் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அதுபோல் வெளிநாடுகள் நமது அரசியலில் தலையிடுவதற்கு எந்த அரசியல் கட்சியும் இடம் கொடுத்துவிடக் கூடாது. வெளிநாட்டு சக்திகள் நமது அரசியலில் மூக்கை நுழைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்று அவர் கூறினார்.

Exit mobile version