Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பா.ஜ.க கண்டனம் : வை.கோ எங்கே?

bjpசென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, சுப்பிரமணிய சுவமி, மோடி போன்ற மத அடிப்படை வாதிகளை ஆதரிக்கும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று கூறிக்கொள்பவர்கள்கூட அதிகாரவர்க்கத்தில் கைவைத்தால் அவர்கள் ஒன்றிணைவார்கள் என்பதற்கான குறியீடு இந்த அறிக்கை. ஆக, அதிகாரவர்க்கத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமே எதிரிகளையும் நண்பர்களையும் இனம்காட்டும்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சத்தியமூர்த்தி பவன் முன்பு சிலர் தமிழ் ஆர்வலர்கள் என்று கூறி போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து காவல் துறை எடுத்த நடவடிக்கை சரி அல்ல. எந்த ஒரு அமைப்பும் கட்சி அலுவலகம் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது. கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காவல் துறை அனுமதிக்கக் கூடாது. கூட்டத்தில் யாராவது ஒருவர் தவறாக நடந்தாலே அங்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்த விவகாரங்களில் காவல் துறையினர் சர்வ சாதாரணமாக சிலரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்று ஒரு இடத்தில் இறக்கிவிட்டுவிடுவதால் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் இல்லாமல் உள்ளது. இது போன்று வன்முறையில் ஈடுபடுபவர்களை ஜாமீனில் வெளியே வர முடியாதவாறு கைது செய்தால் வன்முறையை தடுத்து நிறுத்தலாம். இவர்கள் தமிழ் அமைப்பு என்ற பெயரில் உள்ள கலவரக்காரர்கள். காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை வன்மையாக கண்டிக்கிறோம், அது தண்டிக்கப்பட வேண்டிய கட்சி தான். அந்த கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அதற்காக இதுபோன்று வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி தான் தமிழரே தமிழரை அடித்து அடித்து இலங்கையில் ஒட்டுமொத்தமாக தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது என்றார். ராஜா சத்தயமூர்த்தி பவன் தாக்கப்பட்டது குறித்து பாஜக மாநில துணை தலைவர் ஹெச். ராஜா பழனியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை ஆர்ப்பாட்டங்கள் மூலமாகத் தான் தெரிவிக்க வேண்டுமே தவிர இப்படி அக்கட்சியின் அலுவலகத்தை தாக்குதவது அநாகரீகமானது ஆகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளதையே இது போன்ற தாக்குதல்கள் காட்டுகிறது என்றார்.

Exit mobile version